அரசியல் களம்

டெல்லியில் அமித்ஷாவுடன் பேசியது என்ன..? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை விமான நிலையித்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தசூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டார்.

பிற்பகல் 2 மணி அளவில் விமான நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஓட்டலுக்கு சென்றார். பின்னர் இரவு 9.15 மணி அளவில் டெல்லி கிருஷ்ணமேனன் ரோட்டில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அமித்ஷாவுடன் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் தமிழகத்தின் தேர்தல் அரசியல் பற்றி அவர்கள் விரிவாக விவாதித்தனர்.

தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வுக்கும், காங்கிரசுக் கும் இடையே உள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி குறித்தும் பேசப்பட்டது. அதுபோல ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது பற்றியும், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றியும் அமித்ஷா கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரங்களை எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தன்னிடம் தந்த தொகுதி பட்டியலில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் செய்யப்பட்ட தொகுதி பங்கீடு விவரங்களையும், தற்போது செய்யப்பட்டு இருக்கும் பங்கீடு விவரங்களையும் அமித்ஷா ஒப்பிட்டுப் பார்த்து பா.ஜ.க.வுக்கான தொகுதிகளை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஆராய்ந்து அதில் சிறு மாற்றங்களையும் அமித்ஷா செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையித்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லியில் நேற்று இரவு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். வரவிருக்கும் தேர்தல்களில் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதித்தோம். கூட்டணிகள் குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம், அவர்கள் எங்கள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.