அரசியல் களம்

திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன.? - வைகோ விளக்கம்

திமுக மீது விமர்சனம் வைத்தது இல்லை என வைகோ பேசினார்.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது.

திமுக கூட்டணி

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் த.வெ.க. அரசுக்கு வாழ்த்து தெரிவித்தும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது;

கூட்டணி பேச்சுவார்த்தையில் என்னைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். நேரம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். பாஜகவை எதிர்க்கத்தான் திமுகவை ஆதரித்தோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக முயற்சி செய்தது.

விமர்சனம் வைத்தது இல்லை

ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்? இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

கூட்டணியில் இருந்தபோது திமுக மீது விமர்சனம் வைத்தது இல்லை. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன். சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை. இனி திமுகவுடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது என் நேர்மை, நாணயம் எனக்கு தெரியும். பொது வாழ்க்கையில் நேர்மையை கடைபிடித்து வருகிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.