அரசியல் களம்

தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டது ஏன்? - பெ.சண்முகம் பேட்டி

5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்தி இல்லை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம் இன்று கூடியது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பெ.சண்முகம் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நாங்கள் கேட்ட 6 தொகுதிகளில் ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அது சம்பந்தமாக இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதித்தோம்.

இன்று இருக்கக் கூடிய அரசியல் சூழல், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கக் கூடிய நிலைப்பாடு எந்த விதத்திலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு உதவி செய்யும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடும், நாங்கள் எடுக்கும் முடிவு இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும், தி.மு.க. வழங்க முன்வந்துள்ள 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்தது.

அந்த வகையில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன். இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளை பெறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதே சமயம், நான் ஏற்கனவே சொன்ன காரணங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை ஏற்றுக் கொள்வது என முடிவு செய்திருக்கிறோம். எதிர்வரும் தேர்தலில் இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த அணி வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.