அரசியல் களம்

புதுச்சேரியில் நாளை திமுக, காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கல்?

புதுச்சேரியில் வேட்புமனுக்களை வருகிற 23-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

முதல்கட்டமாக ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. புதுச்சேரியில் வேட்புமனுக்களை வருகிற 23-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 17 அரசு அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்களை மட்டுமே வாங்கி சென்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை (புதன்கிழமை) திமுக, காங்கிரஸ் கட்சிகள் 30 தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு,வேட்பாளர்கள் இறுதியாகாத நிலையில் நாளை அமாவாசை என்பதால் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு இறுதியான பிறகு வேட்பாளர்கள் விட்டுக்கொடுத்து மனுவை வாபஸ் பெற இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. அதில் 2 நாட்கள் அரசு விடுமுறையாகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று எதுவுமே முடியவடைய வில்லை. இதனால் அந்த கட்சியில் போட்டியிட திட்டமிட்டுள்ள வேட்பாளர்கள் இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படாததால் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.