அரசியல் களம்

வேளச்சேரி அதிர 'விசில்' பறக்குமா?: தலைநகரில் களம் இறங்க விஜய் ஆலோசனை

நடிகர்கள் வரிசையில் இந்த முறை விஜய்யும் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

சென்னை,

தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக பிணைப்பு இருந்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் நடிகர் - நடிகைகள் தேர்தல் களம் கண்டு முதல்-அமைச்சராகவும், எம்.எல்.ஏ.ஆகவும் அரியணைக்கு ஏறிச் சென்றிருக்கிறார்கள். சிலருக்கு அந்த வாய்ப்பும் கிட்டவில்லை. அந்தப் பட்டியலில், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கும் நிலையில், தற்போது புதிதாக விஜய்யும் இணைய இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். போட்டி

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இணைந்து முதன் முதலில் 1967-ம் ஆண்டு தேர்தல் களம் கண்டது, சென்னை பரங்கிமலை தொகுதியில் தான். அ.தி.மு.க.வை அவர் தொடங்கிய பிறகு, 1977-ம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அணி சார்பில், 1989-ம் ஆண்டு தேர்தல் களம் கண்ட சிவாஜி கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டார். அதே ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதா களம் கண்டார்.

முதல் தேர்தலில் முத்திரை பதித்தவர்கள்

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் விஜய்காந்தும், 2021-ம் ஆண்டு தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும் போட்டியிட்டனர். ஆனால், இவர்களில் முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்தது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தான். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் தோல்வியையே சந்தித்தனர். நடிகர்கள் வரிசையில் இந்த முறை விஜய்யும் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய அவர், ஊர் ஊராகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

'வி' சென்டிமென்ட்

அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து, சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு, தர்மபுரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருச்சி கிழக்கு, கோவையில் ஒரு தொகுதி என போட்டியிடுவார் என்று அவ்வப்போது கூறப்பட்டது. அதன்பிறகு, ஜோதிடர் கணித்து கொடுத்த 'வி' சென்டிமெண்ட் படி, விருத்தாசலம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. கடைசியாக, இப்போது 'வி' சென்டிமென்டில் தலைநகர் சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பனையூருக்கு அருகில் இந்த தொகுதி இருப்பதால், பிரசாரத்திற்கு சென்று வர வாய்ப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

என்ன காரணம்?

மேலும், வேளச்சேரி தொகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில், முதல் தலைமுறை வாக்காளர்களும், ஐ.டி. துறையில் பணிபுரியும் இளம்தலைமுறை வாக்காளர்களும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இது விஜய்யுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், 2011-ம் ஆண்டு புதிதாக உதயமான தொகுதி இது என்பதால், தி.மு.க., அ.தி.மு.க. என திராவிட கட்சிகள் எதுவும் இன்னும் இங்கு கால் ஊன்றவில்லை. தற்போது, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.தான் இருந்து வருகிறார்.

வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தொகுதி முடிவு குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கும்.

சென்னை: கடலோர காவல் படை 50-வது நிறுவன தினம் விமரிசையாக கொண்டாட்டம்

ஜனாதிபதி மாளிகை வளாக தோட்டம் திறப்பு: பொதுமக்கள் நாளை மறுநாள் முதல் பார்வையிடலாம்

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?

ஆபரேசன் சிந்தூருக்கு பின்... மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு