தண்ணீர் இன்றி பல மணிநேரம் உயிர்வாழக்கூடிய மீன்கள் 
சிறப்புக் கட்டுரைகள்

தண்ணீர் இன்றி பல மணிநேரம் உயிர்வாழக்கூடிய 5 வியக்கத்தக்க மீன்கள்..!

ஆப்பிரிக்க லங்பிஷ் வகை மீன்கள் வறட்சி காலங்களில் சேற்றுக்குள் உடலை புதைத்துக்கொண்டு 4 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.

மீன்கள் என்றாலே ​​அவை நீரில் நேர்த்தியாக நீந்திக் கொண்டிருப்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆம், மீன்கள் நீர்வாழ் உயிரினங்கள் ஆகும். அவற்றின் இயல்பால வாழிடம் தண்ணீர்தான். இருப்பினும், சில மீன்கள் உயிர்வாழ எப்போதும் நீர் தேவைப்படுவதில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

பெரும்பாலான மீன்கள் சுவாசிப்பதற்கும் உடல் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எப்போதும் நீரின் இருப்பைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், சில இனங்கள் தண்ணீர் கிடைக்காத சூழலிலும் நீண்ட காலம் உயிர்வாழும் வகையில் தகவமைத்துக் கொண்டுள்ளன. இத்தகைய மீன்கள், நீர் பற்றாக்குறையாகவோ அல்லது அவ்வப்போது மட்டுமே கிடைக்கக்கூடியதாகவோ இருக்கும் சூழலிலும் சிறப்பாக வாழ்வதற்கு ஏதுவான, தனித்துவமான உடலியல் அமைப்பை கொண்டுள்ளன.

இவ்வாறு தண்ணீர் கிடைக்காத காலத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து உயிர்வாழக்கூடிய 5 வியக்கத்தக்க மீன்களை பார்ப்போம்.

1. லங்பிஷ் (Lungfish)- நுரையீரல் மீன்கள்

தண்ணீர் இல்லாமல் நீண்ட காலம் உயிர் வாழும் மீன்களில் முதன்மையானது நுரையீரல் மீன் (Lungfish). இந்த மீன்கள் தண்ணீருக்கு வெளியே பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட உயிர்வாழக்கூடியவை! இந்த மீன்களுக்குச் செவுள்களும் நுரையீரல்களும் உள்ளன. எனவே, நீர் பற்றாக்குறையாக இருக்கும்போது, ​​இந்த மீன்களால் வெளியிலிருந்து காற்றைச் சுவாசித்துக்கொள்ள முடியும். வறட்சிக் காலங்களில், இவை சேற்றுக்குள் குழி தோண்டி, தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படலமாகச் சளியைப் (mucus) பூசிக்கொண்டு மறைந்துகொள்கின்றன. 'கோடைகால உறக்கம்' (aestivation) என்று அழைக்கப்படும் இந்த நுட்பம், மீண்டும் நீர் கிடைக்கும் வரை அவற்றின் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த வகை மீன்கள் வறட்சி காலங்களில் தண்ணீர் இன்றி நீண்ட காலம் வரை உயிர் வாழக்கூடியது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நுரையீரல் மீன்கள் வறட்சி காலங்களில் சுமார் 3 முதல் 4 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.

2. மட்ஸ்கிப்பர் (Mudskipper)

இந்த மீன்கள் நீரை விட நிலத்திலேயே அதிக நேரம் செலவிடும் ஒரு விசித்திரமான மீன் வகையாகும். இவை தங்கள் வலிமையான மார்புத் துடுப்புகளைப் பயன்படுத்தி நிலத்தில் நடக்கின்றன. மேலும் தங்கள் தோல் மற்றும் வாயின் உட்புறச் சவ்வு வழியாக சுவாசிக்கின்றன. சதுப்புநிலக் காடுகளையும், கடற்கரை பகுதிகளையும் மிகவும் விரும்புகின்றன; அங்கு அவை உணவைத் தேடுவதற்கோ அல்லது வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிப்பதற்கோ பல மணிநேரம் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியும். இந்த மீன்கள் ஈரப்பதமான சதுப்பு நிலங்களில் துடுப்புகளின் உதவியுடன் நடமாடி 2 நாட்கள் வரை உயிர் வாழும்.

3. நடக்கும் கெளுத்தி மீன் (Walking Catfish) - நிலத்தில் உலவும் மீன்கள்

தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 'நடக்கும் கெளுத்தி மீன்', தனது மார்புத் துடுப்புகளைப் பயன்படுத்தி நிலத்தின் மீது நகரும் வியக்கத்தக்க திறனைக் கொண்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு போகும் காலங்களில், இந்த மீன்கள் புதிய நீர்நிலைகளைத் தேடி இடம்பெயர்கின்றன. இவை நீரிலிருந்து வெளியே வந்தாலும், 'சுப்ராபிராங்கியல் சேம்பர்' (suprabranchial chamber) எனப்படும் ஒரு சிறப்பு உறுப்பின் உதவியுடன் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பெற்று, பல மணிநேரம் உயிர்வாழ முடியும்.

4. மரமேறிக் கெண்டை (Climbing Perch)

மிகவும் சுவாரஸ்யமான 'ஏறும் கெண்டை' (Climbing Perch) மீன் தண்ணீர் இல்லாமலேயே 6 நாட்கள் வரை உயிர்வாழக்கூடியது. ஆசியாவின் சில பகுதிகளில் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன. இவை நிலத்தில் ஊர்ந்து செல்லவும், தாழ்வாக வளர்ந்துள்ள தாவரங்களின் மீது ஏறவும் கூடியவை. இந்த மீன்களில் 'லேபிரிந்த் உறுப்பு' (labyrinth organ) எனப்படும் ஒரு சிறப்பு உறுப்பு உள்ளது. இது காற்றைச் சுவாசிக்க உதவுகிறது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இவை மிக எளிதாகத் தங்களை மாற்றிக்கொண்டு உயிர்வாழ முடிகிறது.

5. ஈல்கள் (Eels)- இரவு நேரப் பயணிகள்

நன்னீர் ஈல்களின் பொதுவான பண்புகளில் ஒன்று, அவை சிறந்த வாழ்விடங்களைத் தேடி இரவு நேரங்களில் நீரை விட்டு வெளியே வருவது ஆகும். இவற்றின் வழுவழுப்பான தோல் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நீர் இழப்பைத் தடுப்பதோடு, காற்றிலிருந்து ஆக்சிஜனை உறிஞ்சவும் உதவுகிறது. இதனால், இவை நிலத்தின் வழியாகச் சிறிது தூரம் பயணிக்க முடிகிறது. இதன் மூலம், தேவைப்படும்போது குறுக்கு வழியில் சென்று வேறொரு நீர்நிலையை அடைய இவற்றுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. காற்றைச் சுவாசிக்கும் தகவமைப்பு கொண்ட இந்த மீன்கள் குளிர்ந்த, ஈரப்பதமான சூழலில், தண்ணீர் இல்லாமல் 2 நாட்கள் வரை உயிர்வாழ முடியும்.

SCROLL FOR NEXT