இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான மொத்த வருமானத்தை அறிவித்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் ரூ.100 கோடிக்கும் மேல் வருமானம் அறிவித்தவர்கள் 142 பேர் மட்டுமே இருந்ததாக கூறினார். ஆனால், 2025-26 மதிப்பீட்டு ஆண்டில் அந்த எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, வெறும் ஐந்து ஆண்டுகளில் இந்த பிரிவில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சி, நாட்டில் அதிக வருமானம் பெறும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தொழில், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், உற்பத்தித் துறை மற்றும் முதலீட்டு வருமானம் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், நாட்டில் உள்ள கோடீஸ்வரர்களின் (பில்லியனர்கள்) எண்ணிக்கை அல்லது அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தையும் பராமரிக்கவில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், வருமான வரிச் சட்டத்தில் "பில்லியனர்" என்ற தனிப்பட்ட சட்ட வரையறை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வருமான ஏற்றத்தாழ்வை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக வருமானம் பெறுவோருக்கு கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிப்பது, படிநிலை வருமான வரி முறையை பின்பற்றுவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ரூ.100 கோடிக்கும் அதிகமான வருமானத்தை அறிவிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஒருபுறம் சுட்டிக்காட்டினாலும், மறுபுறம் வருமான சமநிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.