கான்பெரா,
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், மின்டோ புறநகர்ப் பகுதியில் நிலத்தின் அடியில் குகை போன்ற அமைப்பில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில், பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. ‘முக்தி குப்தேஷ்வர்’ என அழைக்கப்படும் இந்த ஆலயம், ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்து சமய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிலத்தின் அடியில் குகை அமைப்பில் கோவில் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்து சமய நம்பிக்கையாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இக்கோவில் உருவானது.
கோவில் கட்டுமானப் பணிகள் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கின. தொடர்ந்து நடைபெற்ற பணிகளுக்குப் பிறகு, 1999-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி மகா சிவராத்திரி நாளில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவபெருமான், ‘முக்தி குப்தேஷ்வர்’ என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். பக்தர்களால் இவர் 13-வது ஜோதிர்லிங்க ஈசனாக கருதி வழிபடப்படுகிறார்.
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்து செல்கின்றனர்.
இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாக மகாதேவர் சிலை விளங்குகிறது. சிவபெருமானின் இந்த சிலையை அப்போதைய நேபாள மன்னர் கோவிலுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
கோவிலின் பிரதான கோபுரம் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்திருந்தாலும், அதன் உட்பகுதி நிலத்துக்கு அடியில் குகையைப் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிலத்தடியில் அமைந்துள்ள குகைக் கோவிலுக்குள் முக்தி குப்தேஷ்வர் சிவபெருமானின் சன்னிதி பிரதானமாக அமைந்துள்ளது.
இதனுடன் பார்வதி தேவி, ராமர்-சீதா மற்றும் விநாயகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே வளாகத்தில் பல்வேறு தெய்வங்களை வழிபடும் வாய்ப்பை பக்தர்கள் பெறுகின்றனர்.
இந்த கோவிலின் மற்றொரு முக்கிய சிறப்பு, இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏராளமான சிவலிங்கங்கள் ஆகும்.
முக்தி குப்தேஷ்வர் பிரதான சிவலிங்கத்துடன், சிவபெருமானின் 108 ருத்ர நாமங்களை குறிக்கும் வகையில் 108 சிவலிங்கங்களும், 1,008 சகஸ்ரநாமங்களை குறிக்கும் வகையில் 1,008 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கோவில் வளாகத்தில் மொத்தம் 1,228 சிவலிங்கங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிலின் குகைப் பகுதியில் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் ஒரு சிறப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என எழுதி வைத்த குறிப்புகள் இந்த பெட்டகத்திற்குள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆஸ்திரேலியாவின் முக்கிய நதிகள் மற்றும் ஐந்து பெருங்கடல்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 81 நதிகளின் நீரும் இக்குகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எட்டு விலைமதிப்பற்ற உலோகங்களும், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் வாழ்த்துகளும் இந்த குகைக்குள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த ஆலயம் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளையும் ஆன்மிக ரீதியாக இணைக்கும் தலமாகவும் பார்க்கப்படுகிறது.
கோவில் வளாகத்தை சுற்றிலும் சுமார் 5 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆலயப் பகுதி இயற்கை எழில் நிறைந்ததாக மாற்றப்பட்டுள்ளது.
கோவிலின் வெளிப்புறத்தில் சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் பிரமாண்ட அமர்ந்தகோல சிலைகளும் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
முக்தி குப்தேஷ்வர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதுதவிர பைரவ அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி உள்ளிட்ட முக்கிய இந்து சமய விழாக்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்து சமய மக்களுக்கு முக்கியமான ஆன்மிகத் தலமாக விளங்கும் இந்த குகைக் கோவில், அதன் தனித்துவமான கட்டமைப்பு, ஏராளமான சிவலிங்கங்கள், ஆன்மிகச் சிறப்புகள் மற்றும் இயற்கைச் சூழல் காரணமாக சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது.
நிலத்தின் அடியில் குகை வடிவில் அமைந்துள்ள சிவாலயம் என்ற தனிச்சிறப்புடன், முக்தி குப்தேஷ்வர் கோவில் ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க இந்து வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.