ஸ்பிரிங்போக் 
சிறப்புக் கட்டுரைகள்

ஆபத்து வந்தால் முதுகில் வெள்ளை கொடி! எச்சரிக்கை செய்யும் அதிசய மான்!

இந்த மான் புல், இலை, தளிர்களை தின்னும். ஆச்சரியம் என்னவென்றால், வருடக்கணக்கில் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழும்.

தென்னாப்பிரிக்காவின் காடுகளில் துள்ளித் துள்ளி குதித்து ஓடும் ஓர் அழகான மான்தான் ஸ்பிரிங்போக். இதன் பெயருக்கு காரணமே அதன் குதித்தல்தான். ஆப்பிரிக்க மக்களின் மொழியில் 'ஸ்பிரிங்' என்றால் குதித்தல், 'போக்' என்றால் மான் என்று பொருள்.

எப்படி இருக்கும்?

இந்த மான் 75 செ.மீ உயரம் வரை வளரும். ஆண் மான் 50 கிலோ வரையும், பெண் மான் 37 கிலோ வரையும் எடை கொண்டிருக்கும். பழுப்பு நிற உடலும், வெள்ளையான வயிற்று பகுதியும் கொண்ட இதன் முகத்தில், கண்ணில் இருந்து வாய் வரை இரண்டு கருப்பு கோடுகள் இருக்கும். ஆண், பெண் ஆகிய இரண்டிற்குமே கொம்புகள் உண்டு. ஆனால், ஆண் மானின் கொம்பு பெண் மானின் கொம்பை விட தடிமனாக இருக்கும்.

அதிசயக் குதி!

இந்த மானின் சிறப்பம்சமே 'பிராங்கிங்' (Pronking) எனப்படும் துள்ளி குதிப்பதுதான். இது ஒரே இடத்தில் இருந்து 2 மீட்டர் உயரம் வரை, தன் கால்களை விறைப்பாக வைத்து கொண்டு காற்றில் துள்ளி குதிக்கும். எதிரிகளை பயமுறுத்தவும், தன் துணை கவரவும் இது இப்படி செய்கிறது. மேலும், இதன் முதுகில் ஒரு தோல் மடிப்பு உள்ளது. அது குதிக்கும் போது திறந்து, உள்ளே இருக்கும் வெள்ளை முடிகளை பூப் போல வெளிக்காட்டும். இதைப் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்.

வெள்ளை விசிறி எப்போது வெளியே வரும்?

மான் பயப்படும் போதோ அல்லது மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் போதோ, இந்த தோல் மடிப்பை தன் தசைகளின் மூலம் மேல்நோக்கி தூக்கும். உடனே, அதன் உள்ளே மறைந்திருக்கும் வெள்ளை முடிகள் விசிறி போல விரிந்து நிற்கும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, முதுகில் ஒரு வெள்ளை பூ பூத்திருப்பது போல தோன்றும். தன் ஜோடியை கவரவும் இது தன் வெள்ளை முடிகளை இப்படி விரித்து காட்டும்.

இதன் பயன் என்ன?

ஒரு மான் இந்த வெள்ளை முடியை காட்டினால், காட்டில் உள்ள மற்ற மான்களுக்கு ஆபத்து தரக்கூடிய விலங்குகள் அருகில் வருவதை எச்சரிக்கும் ஒரு சிக்னல் (அறிவிப்பு) ஆகும். தன்னை தாக்க வரும் வேட்டை விலங்குகளை பயமுறுத்தவும், தன்னை உருவத்தில் பெரியதாக காட்டி கொள்ளவும் இந்த வெள்ளை முடியை இது பயன்படுத்துகிறது. மேலும், இந்த வெள்ளை முடிகளின் அடிப்பகுதியில் வாசனை சுரப்பிகள் உள்ளன. முடிகள் விரியும்போது அந்த வாசனை காற்றில் பரவி மற்ற மான்களுக்கு தகவலை கொண்டு சேர்க்கும்.

தண்ணீர் இல்லாமல் வாழும்!

இந்த மான் புல், இலை, தளிர்களைத் தின்னும். ஆச்சரியம் என்னவென்றால், வருடக்கணக்கில் தண்ணீர் குடிக்காமல் இதனால் உயிர் வாழ முடியும். தான் உண்ணும் இலைகளில் உள்ள ஈரப்பதத்தில் இருந்தே தன் உடலுக்கு தேவையான தண்ணீர் தேவையை இது பூர்த்தி செய்து கொள்கிறது.

வேகம்

இந்த மான் 6 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து 60 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. சிங்கம் போன்ற விலங்குகள் 400 மீட்டர் தூரத்திற்கு மேல் ஓட முடியாது, ஆனால் இந்த மான் 6 கி.மீ தூரம் வரை தொடர்ந்து ஓடி தப்பித்துவிடும். ஒரே துள்ளலில் 2 மீட்டர் நீளம் வரை இது தாண்டும். மான் துள்ளி துள்ளி ஓடும்போது, துரத்தி வரும் எதிரி விலங்குகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி எளிதாக தப்பித்துவிடும்.

எங்கு உள்ளது?

இவை தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா, அங்கோலா போன்ற நாடுகளின் வறண்ட புல்வெளிகளில் வாழ்கின்றன. தற்போது உலகில் இந்த மான்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் மேல் உள்ளது. மேலும், இந்த மான் இனம் 'அழிவு ஆபத்து குறைவான விலங்கு'களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. துள்ளி குதிக்கும் இந்த அதிசய மான், தென்னாப்பிரிக்காவின் தேசிய விலங்காகும்.

மனிதர்களால் எளிதில் நெருங்க முடியாத மிக கடுமையான வறண்ட நிலப்பகுதிகளிலும், இயற்கையாகவே தனக்கு கிடைத்துள்ள வியக்கத்தக்க தகவமைப்புகள் மூலம் இந்த ஸ்பிரிங்போக் மான்கள் தங்களின் இனத்தை தக்கவைத்து கொண்டுள்ளன.

SCROLL FOR NEXT