வெயில் காலத்தில் பகல் நேரம் மட்டுமின்றி இரவில் கூட தூங்கமுடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டில் ஏசி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றை பலரும் வாங்கி மாட்டுவார்கள். கோடை காலம் வந்தாலே ஏசி, ஏர்கூலர்ககளின் விற்பனை ஷோ ரூம்களில் களை கட்டும் இப்படிப்பட்ட சூழலில், "ஏசி வாங்கலாமா? இல்லை ஏர்கூலரே போதுமா?" என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதற்கான பதில், உங்கள் தேவையையும், பட்ஜெட்டையும் பொறுத்தே அமையும். ஏர்கூலர் இயற்கையான முறையில் குளிர்ச்சியை தருகிறது. வெளியிலிருந்து காற்றை இழுத்து, தண்ணீர் நிரப்பப்பட்ட குளிரூட்டும் தகடுகள் வழியாக அனுப்பி அறைக்குள் வீசுகிறது. அதனால் காற்று சற்று ஈரப்பதத்துடன் குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்தால் இன்னும் சில்லென்ற உணர்வு கிடைக்கும். மின்சாரச் செலவும் மிகவும் குறைவு. ஆனால், தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் கிருமிகள், பூஞ்சைகள் உருவாகி உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
மறுபுறம், ஏர் கண்டிஷனர் எனப்படும் ஏசி, அறைக்குள் இருக்கும் காற்றையே குளிர்விக்கிறது. வெளியிலுள்ள வெயில் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அறையை ஒரே மாதிரியான குளிர்ச்சியில் வைத்திருக்க முடியும். ஈரப்பதத்தையும் குறைப்பதால் அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் மிகவும் வசதியாக இருக்கும். ஆனால், ஏர்கூலருடன் ஒப்பிடும்போது மின்சாரச் செலவு அதிகம். வாங்கும் விலையும் சற்று உயர்வாக இருக்கும்.
இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்வெர்ட்டர் ஏசிகள், சுவரில் பொருத்தும் சிறிய ஏர்கூலர்கள் போன்ற பல புதிய மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் புதிய வகை குளிர்விப்பு வாயுக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, தினமும் பல மணி நேரம் கடுமையான வெப்பத்தில் இருந்து நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் ஏசி நல்ல தேர்வாக இருக்கும். குறைந்த செலவில், மின்சாரக் கட்டணத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஏர்கூலர் போதுமானது. வீட்டின் பரப்பளவு, உங்கள் பட்ஜெட், பயன்படுத்தும் சூழல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முடிவு செய்தால், கோடை வெயிலையும் சுலபமாக சமாளிக்கலாம்.