பூமியில் தான் இருக்கிறோமா? அல்லது வேறு ஏதேனும் வேற்றுக்கிரகத்திற்கு வந்துவிட்டோமா? என்று மனிதர்களை திகைக்க வைக்கும் ஒரு விசித்திரத் தீவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏமன் நாட்டில் அமைந்துள்ள ‘சொகோட்ரா’ என்ற அந்த தீவுக்கூட்டம், உலகின் மாபெரும் இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
சொகோட்ரா தீவுக்குள் நுழைந்தாலே, பூமியில் வேறு எங்கும் காண முடியாத ஒரு விசித்திரமான நிலப்பரப்பு நம்மை வரவேற்கிறது. அரிய வகை உயிரினங்கள், வித்தியாசமான தாவரங்கள் என இத்தீவு முழுக்கவே ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன.
யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இத்தீவில் பல்லுயிர் பெருக்கம் கொட்டிக்கிடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-
• 825 தாவர இனங்கள்: இத்தீவில் மொத்தம் 825 வகையான தாவரங்கள் உள்ளன. இதில் 307 தாவர இனங்கள் உலகிலேயே வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவை ஆகும்.
• 90 சதவீதம் ஊர்வன: இங்கு வாழும் 34 வகை ஊர்வன இனங்களில், சுமார் 90 சதவீத உயிரினங்கள் இந்தத் தீவிற்கே உரிய தனித்துவமானவை.
• 95 சதவீதம் நில நத்தைகள்: இங்குள்ள 96 நில நத்தை இனங்களில் 95 சதவீதம் உலகில் வேறு எங்கும் கிடையாது.
நிலப்பரப்பு மட்டுமின்றி, கடல் பகுதியிலும் சொகோட்ரா தீவு சாதனை படைத்துள்ளது. இங்கு 253 வகையான பவளப்பாறைகளை உருவாக்கும் உயிரினங்களும், சுமார் 730 வகையான கடலோர மீன்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதுதவிர, நண்டு, இறால் உள்ளிட்ட 300 வகையான ஓட்டு உடலி உயிரினங்களும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பறவை ஆர்வலர்களைச் சுண்டி இழுக்கும் இடமாக இத்தீவு திகழ்கிறது. இங்கு மொத்தம் 192 பறவை இனங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் 44 வகையான அரிய பறவை இனங்கள் இத்தீவிலேயே தங்கி தங்களது இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சொகோட்ரா தீவின் பிரதான அடையாளமாக விளங்குவது ‘டிராகனின் ரத்த மரம்’ (Dragon's Blood Tree) எனப்படும் வினோத மரமாகும். குடை போன்ற அமைப்பில் வளரும் இந்த மரங்கள், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையிலும், அதே சமயம் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் காட்சியளிக்கின்றன.
இதுமட்டுமின்றி, இத்தீவில் உள்ள பிரம்மாண்ட சுண்ணாம்புப் பாறை மலைகள், மர்மங்கள் நிறைந்த இயற்கை குகைகள் மற்றும் கண்கவர் வெண் மணல் குன்றுகள் ஆகியவை சொகோட்ரா தீவை உலக வரைபடத்தில் தனித்துவமாகக் காட்டுகின்றன.
ஈடு இணையற்ற இந்த உயிரியல் வளத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் அங்கீகரித்த யுனெஸ்கோ அமைப்பு, கடந்த 2008-ம் ஆண்டு சொகோட்ரா தீவை ‘உலக இயற்கை பாரம்பரிய தளமாக’ அறிவித்துக் கௌரவித்தது.