'காதல் சந்தை' 
சிறப்புக் கட்டுரைகள்

ஞாபகம் வருதே..: வியட்நாமில் முன்னாள் காதலர்கள் சந்திக்கும் 'காதல் சந்தை' - பின்னணியில் நெகிழ்ச்சி கதை!

தனது கடந்த காலத்தை கௌரவித்து, வாழ்வில் ஒரு அங்கமாக இருந்த நபருக்கு நன்றியை வெளிப்படுத்தவே இந்த நாள்.

வியட்நாம்,

வியட்நாம் நாட்டில் முன்னாள் காதலர்கள் சந்தித்து கொள்ளும் 'காதல் சந்தை' நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. அதன் பின்னணியில் நெகிழ்ச்சி கதை ஒன்றும் இருக்கிறது. அதுபற்றி தெரிந்துகொள்வோம்.

காதல் இல்லாதது வாழ்க்கை ஆகுமா?

மனித வாழ்வில் பருவ வயதை கடக்கும் ஒவ்வொருவரும், காதல் என்ற உணர்வை அனுபவிக்காமல் இருக்க முடியாது. அதுபோன்ற தருணத்தில், சிலருக்கு இருமனமும் இணையலாம். பலருக்கு ஒருதலை காதலாகவும் அமையலாம். ஆனால், கடந்த கால காதல் இல்லாமல் யாரும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

இதைத்தான், 'இதய தாமரை' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற, 'ஒரு காதல் தேவதை.. பூமியில் வந்தாள்..' என்ற பாடலின் இடையே, 'கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது?' என்று காதலி கேள்வி கேட்க, அதற்கு காதலன், 'ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது?' என்று பதில் கேள்வி கேட்க, அதற்கு காதலி, 'இயல்பானது' என்று பதில் அளித்து இருப்பார். கவிஞர் வைரமுத்து எழுதிய இந்த பாடல் மூலம் காதலை யாரும் தவிர்க்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

முன்னாள் காதலர்கள் சந்தித்தால்..

இன்றைக்கு திருமண வாழ்வில் தம்பதிகளாக பலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களின் முன்னாள் காதலர்களை திடீரென சந்திக்க நேர்ந்தால், என்ன நடக்கும் என்று நினைத்து பாருங்கள்.

அதுபோன்ற, ஒரு நிகழ்வு வியட்நாம் நாட்டில் வடக்கு மலைப் பகுதியில் அமைந்துள்ள காவ் வாய் என்ற கிராமத்தில் ஆண்டுதோறும், வியட்நாமிய சந்திர நாட்காட்டியின் 3-வது மாதத்தின் 27-ம் நாளில் (ஆங்கில மாதப்படி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வரும்) நடந்து வருகிறது.

100 ஆண்டு கால பாரம்பரிய நிகழ்வு

காதல் சந்தையாக நடைபெறும் இந்த நிகழ்வில், முன்னாள் காதலர்களான ஆண், பெண் இருவரும், தங்களுடைய தற்போதைய குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஒருவரையொருவர் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.

ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரிய நிகழ்வு, 1919-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஆரம்பத்தில், ஒரு நாளாக இருந்த இந்த நிகழ்வு, இப்போது 2, 3 நாட்கள் வரை நடைபெறும் கலாசார விழாவாக மாறியிருக்கிறது. இதில், இசை, நடனத்துடன், கடந்த கால காதல் நினைவுகளும் அசைபோடப்படுகின்றன.

காதலின் அடையாளம்

இங்கு வரும் பல திருமணமான தம்பதிகள், முன்னாள் காதலன் அல்லது காதலியை சந்தித்து பேசுவது, அங்குள்ள சமூகத்தில் மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. திருமண வாழ்வை அச்சுறுத்துவதாக யாரும் கருதுவதில்லை.

தனது கடந்த காலத்தை கௌரவித்து, வாழ்வில் ஒரு அங்கமாக இருந்த நபருக்கு நன்றியை வெளிப்படுத்தவே இந்த நாள். இதை கணவனோ, மனைவியோ ஏற்றுக்கொள்கிறார்கள். வெளிப்படையாக இது நடைபெறுவதால், காதலின் அடையாளமாகவே இந்த நிகழ்வு நடக்கிறது.

இந்த காதல் சந்தை நிகழ்வுக்கு பின்னணியில் நெகிழ்ச்சியான கதை ஒன்றும் இருக்கிறது. அதை தொடர்ந்து பார்ப்போம்.

இருவேறு பழங்குடியின சமூகம்

முன்னொரு காலத்தில் நுங் சமூகத்தை சேர்ந்த பா என்ற இளைஞனும், கியாய் சமூகத்தை சேர்ந்த உட் என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். பா ஒரு ஏழை இளைஞன் என்றாலும், புல்லாங்குழல் இனிமையாக வாசிப்பான். காதலி உட், கியாய் சமூக பழங்குடியினத் தலைவரின் மகள் ஆவார்.

இருவரும் வேறு வேறு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் குடும்பத்தினர் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இரு குடும்பங்களுக்கு இடையே உருவான சண்டை, இரு பழங்குடியின மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியது.

முற்றுப்பெறாத காதல் கதை

இந்த நேரத்தில், காதலர்கள் இருவரும், மக்கள் இடையேயான மோதலை தவிர்க்க கனத்த இதயத்துடன் பிரிய முடிவு செய்தனர். ஆனால், பிரிவதற்கு முன்பு, இருவரும் ஒரு முடிவை எடுத்தனர். அதாவது, ஒவ்வொரு ஆண்டும், சந்திர நாட்காட்டியின் 3-வது மாதத்தின் 27-ம் நாளில், காவ் பள்ளத்தாக்கில் சந்தித்து பேசிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.

அன்றைய நாளில், இருவரும் சந்தித்து கடந்த கால காதலை அசைபோடுவார்கள். ஒன்றாக பாடுவார்கள். திருமண வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்வார்கள். பின்னர், பிரியா விடைபெற்று வீடு திரும்புவார்கள். அந்த முற்றுப்பெறாத காதல் கதையின் நினைவாகத்தான் இந்த காதல் சந்தையும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நடக்கிறது. ஒவ்வொருவரின் உணர்வுகளை மதிப்பதையும் உறுதி செய்கிறது.