சிறப்புக் கட்டுரைகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலா? டிரம்ப் கூறியது என்ன... பரபரப்பு தகவல்

அமெரிக்கா, பல்வேறு நிபந்தனைகளை ஏற்று கொண்டால், ஒரு வாரத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என ஈரான் கூறுகிறது.

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலா? என்பது தொடர்பாக டிரம்ப் பரபரப்பு பதிலை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் உள்ள வாக்கு சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தி விட்டு நிருபர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியம் உண்டா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து டிரம்ப் கூறும்போது, அதனை நான் உங்களிடம் கூறி விடுவேன் என்று உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா? என்றார். அது (தாக்குதல்) நாளை கூட இருக்கலாம். அதற்கான சாத்தியம் உள்ளது. தவிர, மிகப்பெரிய, அழகான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. அவர்கள் அதனை விரும்புகிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பது தெரிய வில்லை என்று ஈரானை குறிப்பிட்டு கூறினார்.

ஈரான் விமானங்கள்

எங்களுடைய கடற்படையும், ராணுவமும் சிறந்த பணியை செய்துள்ளது. ஈரானின் போர் விமானங்கள் தகர்க்கப்பட்டு உள்ளன என்றார்.

இதனால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை நடத்த தயாராக உள்ளது என்பது தெரிகிறது. அப்படி தாக்குதல் நடத்தினால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை உலக நாடுகள் எதிர்கொள்ள கூடிய சூழல் ஏற்படும்.

இஸ்ரேலில் தேர்தல்

இஸ்ரேலிலும் தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் பிரதமர் நெதன்யாகு ஆட்சியை இழக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதேபோன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தலும் நடைபெற உள்ளது. போரால் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, அது வாக்காளர்களிடையே ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அடுத்த மாத தேர்தல்களில் அது எதிரொலிக்க கூடும்.

இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியில் சமீபத்தில், ஒரே இரவில் 7 எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என்று ஈரான் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட செய்தியில், இது ஈரான் தாக்கியதாலோ அல்லது கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கியதாலோ ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவித்தது.

பதிலடி

முழு அளவிலான போர் மீண்டும் தொடங்குமோ என்ற பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்த அதிக எண்ணிக்கையிலான கப்பல் தாக்குதல்கள் அதற்கு வலு சேர்ப்பது போன்று அமைந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வணிக கப்பல்கள் ஜலசந்தி வழியாக செல்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவினால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப்படை மீண்டும் அச்சுறுத்தியுள்ளது. இதனால், ஈரான் மீது பதிலடியாக அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்ற சூழல் எழுந்துள்ளது.

ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான ஈரானின் உயர்மட்ட தூதராக உள்ள அப்பாஸ் அராக்சி, ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம் என்று வெளிப்படையாக கூறியபோதும், அந்நாடு தன்னை தற்காத்து கொள்ளவே தயாராக இருப்பது தெரிகிறது. இந்த நீர்வழிப்பாதையின் மீது ஈரான் தனது கட்டுப்பாட்டை இன்று வரை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து முக்கிய ராணுவ பாடங்களை கற்றுக்கொண்டு விட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. அதற்கேற்ப கடந்த சில நாட்களில், கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் தரவு மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளையும் தாக்குதலுக்கான எங்களுடைய இலக்குகளில் சேர்க்கக்கூடும் என்று ஈரான் சுட்டிக்காட்டியதும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்க படைகள் குவிப்பு

இந்த நிலையில், அமெரிக்கா தனது பங்கிற்கு, பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவில் படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானப்படையுடன் 3-வது விமானந்தாங்கி கப்பல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதனுடன், ஆயிரக்கணக்கான படை வீரர்களையும் இப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.

அமெரிக்கா பல்வேறு நிபந்தனைகளை ஏற்று கொண்டால், ஒரு வாரத்திற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்றும் ஹார்மூஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிடும் தனது சமீபத்திய திட்டங்களையும் ஈரான் இன்னும் முன்வைத்து வருகிறது.

அமெரிக்கா முற்றுகை

அதில், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் அடங்கும். எனினும், கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவும், ஈரானும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், சில நாட்களிலேயே அது முறிந்துபோனது.

இதற்கிடையில், இரு நாடுகளையும் மீண்டும் முறையான பேச்சுவார்த்தைகளுக்கு கீழ் கொண்டு வர மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் ஏற்படவில்லை. இந்த நிலையில், டிரம்ப்பின் ஈரானுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான இந்த பதில் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT