சிறப்புக் கட்டுரைகள்

மனிதனை விட பலம் மிக்கவை எறும்புகள் தானாம்...அது எப்படி?

எறும்புகள் சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினம்.

நமது கண்ணுக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் எறும்புகள் மனிதனை விட பலம் மிக்கவை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் கூட மிகத் துல்லியமாக உணர முடியாத பூகம்பம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் களை சின்னஞ்சிறு உயிரினமான எறும்புகளால் முன்னதாகவே உணர முடியும் என்றால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதுதான் உண்மை. மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பல்வேறு சிறப்பு அம்சங்கள் எறும்புகளுக்கு உண்டு. அண்டார்டிகா போன்ற பனிப் பிரதேசம் தவிர்த்து உலகம் முழுவதும் பரவலாக வாழும் உயிரினம் எறும்புகள். இந்த உலகில் 10 முதல் 12 ஆயிரம் வகையிலான எறும்புகள் உள்ளன.

எறும்புகள் சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினம். டைனோசர் காலத்தில் தோன்றி வளர்ந்த எறும்புகளுக்கு எந்த இயற்கை பேரிடராலும் அழிவில்லை. எறும்புகள் கூட்டம், கூட்டமாக சமூக அமைப்புடன் வாழும் தன்மை கொண்டவை. எறும்பு புற்றுக்குக் கீழ் ஒரு நகரம் போன்ற அமைப்பே இருக்கும். இதை 'காலனி' என்பார்கள். ஒரு எறும்புக் கூட்டில் சில நூறு முதல் பல லட்சங்கள் வரை எறும்புகள் வாழும். எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு ஒரு மில்லியன் என்ற அளவில் பெரும் எண்ணிக்கை யில் உள்ளது எறும்புக் கூட்டம்.

விவசாயிகள்

எறும்புகளுக்கு என்று பல சிறப்புக் குணங்கள் உள்ளன. குறிப்பாக, எறும்புகள் தங்களுக்குத் தேவையான உணவுக்காக விவசாயிகள் போல பயிரிட்டு அறுவடை செய்யும் விசேஷ தன்மை கொண்டவை. அந்த வகையில் பார்த்தால் உலகில் மனிதனுக்கு முந்தைய விவசாயிகள் எறும்புகள் தான். குடியிருப்பு இடங்களான நிலம், மரம், நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்ட உயிரினம் எறும்பு. பல்லுயிர் உணவுச் சங்கிலியில் எறும்புகளுக்கும் முக்கிய இடம் உண்டு. உலகில் மிகச்சிறந்த உயிர் தப்பி வாழும் உயிரினம்' என்றால் அது எறும்புதான்.

எறும்புகளுக்கு சுவாசிக்கும் உறுப்பு கிடையாது. ஆக்சிஜனை உடலுக்குள் கொண்டு செல்ல உடலைச் சுற்றி சுவாச வழிகள் உள்ளன. அதன் வழியாகத்தான் எறும்புகள் சுவாசிக்கும். அதேபோல் எறும்புகளுக்கு காதுகளும் கிடையாது. அதிர்வு மூலமே அனைத்தையும் உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவை. அதன் முழங்காலுக்குக் கீழே உள்ள துணை உறுப்புகள் மூலம் அதிர்வை உணருகின்றன.

விசேஷத் தன்மை

நாம் நசுக்கினால் பலியாகும் மிக அற்பமான உயிரினம் என எறும்புகளை துச்சமாக நினைக் கிறோம். ஆனால் அவற்றிற்கு மனிதனிடம் இல்லாத பல்வேறு சிறப்புத் தன்மைகள் உள்ளன. பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை ஆய்வாளர் கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும் புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யேக மென்பொருளில் இயங்கும், வீடியோ கேமரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில், சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் உணவு சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள். இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும்.

ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக. எறும்புகள் வெளியேறுகின்றன என்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு

மேலும் செம்மர எறும்புகள் பற்றி துய்ஸ்பர்க் சென் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் உல் ரிச்சும் அவரது குழுவினரும் ஆய்வு நடத்தினார்கள். இவர்கள் மேற்கு ஜெர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு மலைப்பகுதிகளை ஆய்வு செய்தனர். அருகாமையில் ஏற்படும் சிறு நிலச்சரிவின்போது இந்த எறும்புகள் விநோதமாக நடந்து கொள்வதை அப்போது அவர்கள் கண்டறிந்தனர்.

உல்ரிச் ஸ்கர்பர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் உள்ள அப்ருசோ பகுதிக்கு சென்றிருந்தார். எல் அகுய்லா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் உல்ரிச் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது புவியியல் கோட்டு பகுதியில் எறும்புக் கூடுகள் இருப்பதை கண்டார். தமது ஆய்வு தொடக்க நிலையிலேயே இருப்பதாக கூறும் உல்ரிச் வருங்காலத்தில் மனித உயிர்களை காக்கும் வகையில் பூகம்பம் மற்றும் நிலச்சரிவை முன்கூட்டியே தெரிவிக் கும் சிற்றினமாக எறும்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எறும்புக் கூட்டம் வருவது எப்படி?

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது?

எறும்புகளுக்கு மனிதனைவிட மோப்ப உணர்வு அதிகம். ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு. அதன் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல் லும்போது உடலின் பின்பகுதியில் இருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்த கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

நாம் வாசலில் மாக்கோலம் போடுவதே எறும்புகளுக்கு உணவு வழங்கத்தான். இதுபோன்ற இயற்கையுடன் கூடிய வாழ்க்கை முறை மாறிப் போனதால் தான் இன்று பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு உயிரினங்கள் அழிய மனிதனே முக்கிய காரணமாகின்றான். மனித இனம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல்வேறு உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தின் காவலர்க ளாக விளங்கி வருகிறார்கள். இந்த வகையில் சுறுசுறுப்புக்கும், சேமிப்புக்கும் புகழ்பெற்ற எறும்பு கூட்டத்தை பாதுகாப்பதும் நமது சமுதாய கடமைதான்.

SCROLL FOR NEXT