சிறப்புக் கட்டுரைகள்

அரசியல் வருகைக்கா இந்த ஆயத்தம்? - தனுஷ், சிவகார்த்திகேயனின் வைரல் உரைகளும்... எழும் கேள்விகளும்

தனுஷ் , சிவகார்த்திகேயன் இருவரும் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரடி அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சென்னை,

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சமீபத்தில் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் பேசிய பேச்சுகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இருவரும் நேரடியாக அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்தல், நற்பணிகளில் ஈடுபடுதல், மக்களுடன் தொடர்பு கொள்வது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, அவர்கள் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜூலையில் தனுஷ் பேசிய பேச்சு

கடந்த ஜூலை மாதம் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றங்கள் சார்பில் பிரமாண்ட ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், ரசிகர் மன்றத்திற்கான அதிகாரப்பூர்வ கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அப்போது ரசிகர்களிடம் பேசிய அவர், ஒரே இடத்தில் அதிகமானோர் கூடியிருப்பது மிகப்பெரிய சக்தி என்றும், அந்த ஒற்றுமையை பயனுள்ள நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களையும், சுற்றியுள்ள குடும்பங்களின் தேவைகளையும் புரிந்துகொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களின் பலத்தை நற்பணிகளாக மாற்ற வேண்டும் என்று தனுஷ் வலியுறுத்தியது, அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற விவாதத்தை ஏற்படுத்தியது.

2,000 நிர்வாகிகளுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

தனுஷைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்திய நிகழ்வும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை போரூரில் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாவட்டம், நகரம், ஒன்றியம் மற்றும் பகுதி அளவிலான சுமார் 2,000 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு பார்ப்பதற்கு ஒரு மாநாட்டை போன்று அமைந்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் பேசிய கருத்துகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

“நான் மக்களால் உருவாக்கப்பட்டவன்”

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “எல்லோரும் என்னை ’தானாக உருவானவன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நிச்சயமாக ’தானாக உருவானவன்’ அல்லொ. நான் ‘மக்களால் உருவாக்கப்பட்டவன்’. 2012-ல் நான் சினிமாவுக்கு வந்தபோது, நானும் விஜய் சேதுபதியும் மட்டும்தான் பின்புலம் இல்லாத வெளிப்புற நபர்களாக இருந்தோம். ஒரு தொகுப்பாளர் எப்படி கதாநாயகனாக முடியும் என்ற கேள்வி பலருக்கு இருந்தது. ஆனால் மக்களுக்கு அந்த கேள்வி என்றுமே இருந்ததில்லை” என்று கூறினார்.

விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம்

தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் பேசினார்.

“நம்மைப் பற்றி குறை சொல்வதற்கும், கேள்வி கேட்பதற்கும் எப்போதும் சிலர் இருப்பார்கள். அது பரவாயில்லை. அவர்களின் வார்த்தைகளை நாம் நெஞ்சில் ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை. ஒருவர் நம்மை காயப்படுத்தும்போது பழிவாங்குவதில் நேரத்தை வீணடிக்காமல், நமக்கு உறுதுணையாக இருந்தவர்களை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மேலும், “நாம் புன்னகைத்துக்கொண்டே முன்னேறிச் செல்வோம். ஒரு நதியைப் போல இருங்கள். நதி தனக்கான சரியான பாதைக்காக காத்திருப்பதில்லை; அதுவே பாதையை உருவாக்கிக் கொள்கிறது. அது பாயும் இடமெல்லாம் உயிர்ப்பைக் கொடுத்து மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக மாறுகிறது” என்றும் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பெயர்களை குறிப்பிட்ட சிவகார்த்திகேயன்

நிகழ்ச்சியில் சாதி, மதம் கடந்து அன்பால் ஒன்றிணைந்து இருப்பதாக குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், ரத்தன் டாடா, அன்னை தெரசா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

“அவர்களை நாம் இன்றளவும் பேசுவதற்குக் காரணம், அவர்கள் பிரதிபலன் பாராமல் செய்த நன்மைகள்தான். நாம் யாரையும் எதிர்ப்பதற்காகவோ, பெரிய ஆள் என்று நிரூபிப்பதற்காகவோ இதைச் செய்யவில்லை” என்று கூறினார்.

புத்தக வாசிப்புக்கும் முக்கியத்துவம்

தனது வாழ்க்கையில் புத்தக வாசிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறிய சிவகார்த்திகேயன், ரசிகர்களும் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது புத்தகம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசியல் ஊகங்களுக்கு காரணம் என்ன?

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய நடவடிக்கைகள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்துவதற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சுமார் 2,000 பேர் ஒரே இடத்தில் திரண்டதும், அவர்கள் ஒரே மாதிரியான வெள்ளை நிற சட்டையில் பங்கேற்றதும் ஒரு மாநாட்டை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

அதேபோல், “மக்களால் உருவாக்கப்பட்டவன்” என்ற கருத்தை சிவகார்த்திகேயன் முன்வைத்ததும், ரசிகர்களின் பலத்தை நற்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தனுஷ் கூறியதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியலுக்கு வருகிறார்களா?

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள சூழலில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரசிகர் மன்ற செயல்பாடுகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன.

இருவரும் தங்களது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, நற்பணிகளில் ஈடுபட்டு வருவது அரசியல் வருகைக்கான முன்னேற்பாடா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

எனினும், தனுஷ் , சிவகார்த்திகேயன் இருவரும் இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரடி அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, தற்போதைய நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள ஊகமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT