இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில் சிறிய, நடுத்தர நகரங்களின் பங்கு, ஆகஸ்டு இறுதி நிலவரப்படி 15.3 சதவீதமாக உள்ளது.
நிர்வகிக்கும் சொத்து
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.
இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.
30 பெரிய நகரங்கள்
புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா, சூரத் உள்ளிட்டவை இந்தியாவின் 30 பெரிய நகரங்களாக இருக்கின்றன.
இந்த பெருநகரங்கள் நீங்கலாக மற்ற சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறையில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பில், 30 பெரிய நகரங்களைச் சாராத முதலீட்டாளர்களின் பங்கு ரூ.ரூ.3.92 லட்சம் கோடியாக இருக்கிறது. இது இத்துறையின் சொத்து மதிப்பில் (ரூ.25.64 லட்சம் கோடி) 15.3 சதவீதமாகும். ஜூலை மாதத்தில் அது 15.49 சதவீதமாக இருந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 14.48 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 130 கோடி ஆகும். இதில் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங் களில் முதலீடு செய்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) அமைப்பு கூறி உள்ளது. இதே காலத்தில் இத்துறையில் 10 கோடி முதலீட்டாளர்கள் இருப்பார்கள் என அந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
முதலீட்டாளர் கணக்குகள்
சிறிய, நடுத்தர நகரங்களின் பங்களிப்பால் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர்கள் கணக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018-19-ஆம் நிதி ஆண்டில் இத்துறையில் முதலீட்டாளர் கணக்குகள் 1.11 கோடி உயர்ந்தது. இதனையடுத்து கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் கணக்குகள் 4.81 லட்சம் அதிகரித்துள்ளது. எனவே மொத்த எண்ணிக்கை 8.53 கோடியாக உயர்ந்துள்ளது.
புதிய முதலீட்டாளர்கள்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் பெற்ற நிபுணர்களின் துணையுடன் முதலீடுகளை மேற்கொள்கின்றன. வல்லுனர்கள் உதவியுடன் புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. எனவே புதிய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.