கூடங்குளத்தில் உள்ள ஒன்றாம் அணுஉலை 2014-ல் செயல்பட தொடங்கியது. இரண்டாம் அணுஉலை 2017-ல் செயல்பட தொடங்கியது. இந்த இரண்டு அணுஉலைகளும் 1000 மெகாவாட் திறன் கொண்டவை. இதுபோன்ற 1000 மெகாவாட் திறன் கொண்ட அணுஉலைகள் 27-ல் இருந்து 37 டன் வரை அணுக்கழிவுகளை வெளிப்படுத்தும்.
தற்போது இருக்கும் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் ஏ.ஆர். கட்டிடத்தில் விரைவில் இடப்பற்றாக்குறை ஏற்பட உள்ளது. இந்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவே 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மே 2018-க்குள் அணுஉலைக்கு சிறிது தூரம் தள்ளி அணுக்கழிவுகளுக்கான ஏ.எப்.ஆர். நிலையம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலையம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.
அணுக்கழிவு சேமிப்பு நிலையம்
அணுஉலைக்கு அருகிலேயே இருக்கும் ஏ.ஆர். அணுக்கழிவு நிலையம் ஒரு நீர் நிறைந்த குளம். அணுக்கழிவுகள் அணுக்கசிவு ஏற்படாதவாறு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு அந்த குளத்திற்குள் வைக்கப்படும். இப்போது புதிதாக கட்டப்படுவதாக இருக்கும் ஏ.எப்.ஆர். அணுக்கழிவு சேமிக்கும் நிலையமும் இதே போன்றுதான் இருக்கும். ஆனால் பெரிதாகவும், அணுஉலைக்கு சிறிதுதூரம் தள்ளியும் இருக்கும். இந்த ஏ.எப்.ஆர். நிலையம் 4,328 அணுக்கழிவு கொள்கலன்கள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட உள்ளது. சூடாக இருக்கும் அணுக்கழிவுகளை, 5 ஆண்டுகள் வரை அணுஉலைக்கு அருகில் இருக்கும் ஏ.ஆர். அணுக்கழிவு நிலையத்தில் குளிர்படுத்தப்பட்ட பிறகே ஏ.எப்.ஆர். நிலையத்திற்குள் மாற்றி வைக்க முடியும். கிரேன் மூலமாக ஏ.ஆர். நிலையத்தில் இருந்து ஏ.எப்.ஆர். நிலையத்திற்கு அணுக்கழிவு கொள்கலன்கள் மாற்றி வைக்கப்படும். ஏ.ஆர். மற்றும் ஏ.எப்.ஆர் அணுக்கழிவு நிலையங்கள் இரண்டுமே சூடாக இருக்கும் அணுக்கழிவுகளை குளிர்படுத்துவதற்கும் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கும் பயன்படும்.
ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையம் அமைப்பதில் தாமதம்
ஏ.எப்.ஆர், அணுக்கழிவு நிலையத்தை 2018-க்குள் கட்டிமுடிக்க முடியாததால் அரசுக்கு சொந்தமான இந்திய அணுசக்தி நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்) கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தது. ரஷிய எரிபொருளில் இருந்து வரும் அணுக்கழிவுகளை நெடுங்காலம் வரை சேமித்து வைப்பதற்கான அனுபவம் இல்லாததே தாமதத்திற்கு காரணம் என்று அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையத்தை கட்டிமுடிக்கும் வரை கூடங்குளம் அணுஉலையை நிறுத்திவைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தை நாடினர்.
ஆனால் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்து ஏப்ரல் 22, 2022-க்குள் ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று இந்திய அணுசக்தி நிறுவனத்திற்கு அவகாசம் கொடுத்தது. இதற்கு மேல் அவகாசம் கொடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவில்லை என்றால் போதிய இடம் இல்லாமல் ஏ.ஆர். நிலையத்தில் அணுக்கழிவு கொள்கலன்களை நெருக்கமாக வைக்க நேரிடலாம். இதனால் ஏ.ஆர். அணுக்கழிவு நிலையத்தில் இருந்து அணுக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அணுக்கழிவு நிலையம் அமைக்கப்படும் இடம்
ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள் உள்ளே 0.35 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. அணுக்கழிவு நிலையத்தை அணுஉலைக்கு அருகில் அமைப்பதால் நாளடைவில் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற அணுக்கழிவு நிலையங்கள் சிறிய அளவு அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதற்கு மட்டுமே சிறந்தது.
அணுக்கழிவு நிலையத்தில் உள்ள குளம் பாதுகாப்பாக இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை. ஆனால் எதோ ஒரு எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால், சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்பு இருக்கிறது. இந்த அணுக்கழிவுகளின் கதிரியக்கம் பாதியாக குறைய 1000 ஆண்டுகளாவது ஆகும். அவற்றை மாசடைந்த பொருட்களில் இருந்து பிரித்தெடுப்பது கடினம் என்று கூறுகிறார் சென்னை ஐ.ஐ.டி. துணை பேராசிரியர் டாக்டர் பிரபுல்லா குமார் பெஹெரா.
புதிய அணுஉலைகள்
ஏ.எப்.ஆர். அணுக்கழிவு நிலையத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த அணுக்கழிவு நிலையம் கூடங்குளத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் அணுஉலைகளில் இருந்து வெளிவரும் அணுக் கழிவுகளை வைப்பதற்காக மட்டுமே கட்டப்பட உள்ளது. இந்தியாவிற்கும், ரஷியாவிற்குமான ஒப்பந்தத்தின்படி, கூடங்குளத்தில் புதிதாக 1000 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அணுஉலைகள் வர உள்ளது. புதிதாக கட்டப்பட இருக்கும் மூன்று மற்றும் நான்காம் அணுஉலையின் செலவு ரூ.39,849 கோடி.
இந்த அணுஉலைகளை கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன. 2023-24 க்குள் இவை கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணுஉலை ஐந்து மற்றும் அணு உலை ஆறு கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இவை இரண்டும் ரூ.49,621 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த நான்கு அணுஉலைகளும் கட்டிமுடிக்கப்பட்டபின் கூடங்குளம் 6000 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையமாக இருக்கும். புதிதாக கட்டப்பட இருக்கும் அணுஉலைகளால் வெளியாகும் அணுக்கழிவுகளும் அதிகரிக்கும்.
நிரந்தர தீர்வல்ல
ஆழமான நிலத்தடி களஞ்சியமே அணுக்கழிவுக்கு நெடுங்கால நிரந்தர தீர்வு. கதிரியக்கம் அதிகம் இருக்கும் அணுக்கழிவுகள் (புளூடோனியம் 1000 ஆண்டுகள் வரை) காலத்திற்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த களஞ்சியத்தை நிலத்தடிக்குள் மிகவும் ஆழமாக அமைக்க வேண்டும். மேலும், அணுக்கழிவுகள் அறையின் வெப்பநிலைக்கு குளிர்படுத்தப்பட்ட பிறகே டி.ஜி.ஆர். நிலத்தடி அணுக்கழிவு களஞ்சியத்திற்குள் மாற்றி வைக்க முடியும் என்று கூறுகிறார் டாக்டர் பெஹெரா.
ஆழமான நிலத்தடி அணுக்கழிவு களஞ்சியம் எந்த ஒரு இடையூறும் இல்லாத ஒரு இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அணுக்கழிவுகள் பாதுகாப்பாக இருக்கும். தற்போது இந்தியாவில் டி.ஜி.ஆர். எனப்படும் ஆழமான நிலத்தடி களஞ்சியம் கிடையாது. மேலும் அதற்கான வரைமுறைகளை இந்தியாவின் அணுசக்தி வாரியம் (எ.இ.ஆர்.பி) இன்னும் வரையறுக்கவில்லை. உலகத்தில் எங்குமே அணுக்கழிவுக்கான நிரந்தர தீர்வாக கருதப்படும் டி.ஜி.ஆர். கிடையாது. மே 2011-ல் ஒல்கிலுஓடோ என்ற இடத்தில் டி.ஜி.ஆர். அமைக்க பின்லாந்து முடிவெடுத்தது. இது 2020-ற்குள் கட்டிமுடிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெற்றிகரமாக கட்டிமுடிக்கப்பட்டால் இதுவே உலகின் அணுக்கழிவுக்கான முதல் ஆள் நிலத்தடி டி.ஜி.ஆர். ஆகும்.
ஆழமான நிலத்தடி அணுக்கழிவு நிலையமான டி.ஜி.ஆரை அமைக்க தேர்வு செய்யப்படும் இடத்திற்கு கண்டிப்பான பல வரைமுறைகள் உள்ளது. நில அதிர்வுகள் எதுவும் ஏற்படாத இடமாக அது இருக்க வேண்டும். அமெரிக்கா அதிக பணமும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு யூகா மலையில் டி.ஜி.ஆரை அமைக்க முயற்சித்தது. ஆனால், பொதுமக்கள் அதை ஏற்றுக்கொள்ளாததால் அமெரிக்க அரசு டி.ஜி.ஆர். கட்டும் முயற்சியை கைவிட்டது என்று கூறுகிறார் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மற்றும் முன்னாள் இயக்குனர் எம்.சாய் பாபா.
மீண்டும் எரிபொருளாக்கும் வசதி இல்லை
அணுக்கழிவுகளின் ஆபத்துகளை குறைக்க அதனை பதப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அணுக்கழிவுகளை அதன் கதிரியக்கத்தின் தீவிரத்தை வைத்து பல்வேறு கூறுகளாக பிரித்தெடுப்பது ஒரு முறை. அணுக்கழிவுகளை பதப்படுத்தி மீண்டும் எரிபொருளாக இந்தியா மாற்றுகிறது என்று கூறுகிறார் டாக்டர் பெஹெரா.
இந்தியா மூடிய எரிபொருள் சுழற்சி முறையை பின்பற்றுகிறது. அதன்படி, அணுக்கழிவுகள் பதப்படுத்தப்பட்டு எரிபொருளாக மாற்றப்படும். ஆனால், கூடங்குளத்தில் தற்போது இது நடக்கவில்லை.
இந்தியாவில் இருக்கும் அணுக்கழிவை பதப் படுத்தும் மையங்கள் அழுத்தப்பட்ட கனமான நீர் வகை அணுஉலைகளில் இருந்து வெளிவரும் அணுக்கழிவுகளை மட்டுமே பதப்படுத்தும். தற்போது கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் அணுஉலைகள் கனமில்லா நீர் வகையை சார்ந்தவை என்று கூறுகிறார் சுற்றுசூழல் ஆர்வலர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் சுந்தர்ராஜன்.
2018-ல் ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளத்திற்கு அணுக்கழிவுகளை பதப்படுத்தி மீண்டும் அணுஉலை எரிபொருளாக மாற்றும் மையங்கள் தற்போது இல்லை என்று கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் 33 சதவீத ஆற்றலிலேயே செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின் நிலையம் 48 முறை செயலிழந்துள்ளது. பராமரிப்பு காரணங்களுக்காகவும் பல முறை அணுஉலைகளை நிறுத்திவிடுகின்றனர் என்கிறார் சுந்தர்ராஜன்.
கூடங்குளத்தில் எவ்வளவு அணுக்கழிவு உற்பத்தி ஆகிறது என்பது குறித்த அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லாததால், மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆற்றல் குறைவு குறித்தும், வெளிப்படைத்தன்மை குறைவு குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.