தன் அழகால் மயக்கும் உயிரினத்தில், பென்குயின் முக்கியமானது. இவை பூமியின் தெற்கு அரைக்கோளம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள பல தீவுகளில் காணப்படுகின்றன. பென் குயினில் 17 வகையான இனங்கள் உள்ளன.
* இது, பறவை இனத்தைச் சேர்ந்தது என்றாலும், பென்குயினால் பறக்க இயலாது. ஆனால் இந்தப் பறவை, நீரில் நீந்திச் செல்வது பறப்பது போலவே இருக்கும். தரையில் இவை மனிதர்களைப் போல, இரண்டு கால்களால் நடந்து செல்லும்.
* நிலத்திலும், நீரிலும் வாழும் தன்மை கொண்ட பென்குயின், தன்னுடைய வாழ்நாளில் 75 சதவீதத்தை நீரில் உணவு தேடுவதிலேயே கழித்துவிடுகிறது.
* பென்குயினால், அதிக நேரம் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது. ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கும் வித்தை தெரிந்த பறவை இது.
* பென்குயினின் உடல் அமைப்பு, நீரில் நன்றாக நீந்துவதற்கு ஏற்றாற்போல அமைந்திருக்கிறது. இது மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச்செல்லும்.
* திமிங்கலத்தைப் போல், பென்குயின் தோலின் அடிப்பகுதி முழுவதும் கொழுப்பு சூழ்ந்திருக்கும்.
* இதன் உடல் வெப்ப நிலையானது, மனிதர்களை ஒத்திருக்கும். பென்குயின்கள் ஆயிரக்கணக்கானவை ஒன்றிணைந்து நின்றுகொண்டு, தங்கள் உடலுக்கு வெப்பத்தை பெற்றுக் கொள்ளும்.
* பென்குயினுடைய முக்கியமான உணவாக சிறிய அளவிலான மீன்களும், இறால்களும் உள்ளன. வழுவழுப்பு தன்மையுடைய மீன்களாக இருந்தாலும் அவற்றை தவறவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் வகையில், இதன் அலகு அமைந்திருக்கிறது.
* பென்குயின் நன்னீரை குடிக்காது, நன்னீரில் வாழாது. கடல் நீரை மட்டுமே அருந்தும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பு பிரிந்து தனியாக வெளியேற்றப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
* இந்தப் பறவை இனப்பெருக்க காலத்திற்கு முன்பாகவே, முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து வைத்துவிடும். அதன்பிறகே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பென்குயின் தனக்கான இணையை, பாட்டு பாடி குரல் வளத்தின் மூலமாக தேர்வு செய்கின்றது.
* பென்குயின் பொதுவாக இரண்டு முட்டைகள் மட்டுமே இடும். முட்டையிட்ட பின்னர் பெண் பறவை இறைதேட கடலுக்குள் சென்றுவிடும். அது வரும் வரை ஆண் பறவைதான், அடைகாக்கும்.
* கடல் சிங்கம் என்று அழைக்கப்படும் சீல் தான், பென்குயினின் முதல் எதிரியாகும்.