குலாப் ஜாமுன் 
சிறப்புக் கட்டுரைகள்

சுடச்சுட குலாப் ஜாமுன்... நாவில் கரையும் சுவை; ஓர் ஊரின் அடையாளமாக மாறிய இனிப்பு வரலாறு

மைகல்கஞ்ச் மக்களுக்கு குலாப் ஜாமுன் விற்பனை என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல; அது அவர்களது வாழ்வோடு கலந்த வாழ்வாதாரம்.

சாப்பிட்டு முடித்ததும் இனிப்பு, அதுவும் சுடச்சுட குலாப் ஜாமுன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படிப்பட்ட இனிப்பு பிரியர்களுக்காகவே, குலாப் ஜாமுன் பெயரிலேயே ஒரு கிராமமே இயங்கி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள மைகல் கஞ்ச் (Maigalganj) என்ற ஊர்தான், இன்று நாடு முழுவதும் 'குலாப் ஜாமுன் கிராமம்' என்றும், 'குலாப் ஜாமுன் தெரு' என்றும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது.

1941-ல் தொடங்கிய இனிப்பு புரட்சி

மைகல்கஞ்ச் கிராமத்தின் இந்த இனிப்பான வரலாறு இன்று நேற்றல்ல, கடந்த 1941-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. அப்போது அங்கு ஆரம்பிக்கப்பட்ட 'தன்பால் மிஷ்தான் பண்டார்' என்ற ஒரு சிறிய கடையில் விற்கப்பட்ட சூடான குலாப் ஜாமுன்கள், அந்த வழியாக சென்ற வழிப்போக்கர்களின் நாவை சுண்டி இழுத்தன.

வாடிக்கையாளர்கள்

நாட்கள் செல்ல செல்ல, இதன் அபார சுவை காட்டுத்தீ போல பரவ, வாடிக்கையாளர்களின் கூட்டமும் அலைமோதியது. விளைவு, அடுத்தடுத்து பல கடைகள் முளைத்தன. ஒரு சிறிய கடையில் தற்செயலாக தொடங்கிய இந்த இனிப்பு வியாபாரம், நாளடைவில் ஒட்டுமொத்த ஊரின் அடையாளத்தையே மாற்றி போடும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

பயணிகளின் ஸ்வீட் ஸ்டாப்

டெல்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள், மைகல்கஞ்ச் பகுதியை நெருங்கினாலே தங்களது வாகனங்களின் வேகத்தை குறைத்து விடுகிறார்கள். இங்கு விற்கப்படும் பாரம்பரிய மண் கிண்ணங்கள் மற்றும் சிறிய மண் பானைகளில் (குல்ஹட்) ஆவி பறக்க பரிமாறப்படும் குலாப் ஜாமுன்களை ருசி பார்க்காமல் யாரும் இந்த எல்லையை கடப்பதில்லை.

அங்கு அமர்ந்து சூடாக சாப்பிடுவது மட்டுமின்றி, தங்களது குடும்பத்தினருக்காகவும், உறவினர்களுக்காகவும் கிலோ கணக்கில் பார்சல் கட்டி கொண்டும் செல்கின்றனர் பயணிகள். இந்த நெடுஞ்சாலை பயணம் பலருக்கு இந்த இனிப்பால் சுவையான நினைவாக மாறிப்போகிறது.

குடும்பங்களின் வாழ்வாதாரம்

மைகல்கஞ்ச் மக்களுக்கு குலாப் ஜாமுன் விற்பனை என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல; அது அவர்களது வாழ்வோடு கலந்த வாழ்வாதாரம். தலைமுறை தலைமுறையாக இந்த இனிப்பை மட்டுமே தயாரித்து விற்கும் ஏராளமான குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இனிப்பு தயாரிப்பது முதல், அதனை பதப்படுத்தி விற்பனை செய்வது வரை பல்லாயிரக்கணக்கானோருக்கு இது நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

சுப நிகழ்ச்சிகள்

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள மாவட்டங்களில் நடக்கும் திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கும் மைகல்கஞ்ச் குலாப் ஜாமுன்கள்தான் தற்போதைய பிரதான சாய்ஸ். நீங்களும் அந்த பக்கம் போனால், இந்த மண் மணக்கும் குலாப் ஜாமுனை சுவைக்க மறந்துவிடாதீர்கள்

SCROLL FOR NEXT