சிறப்புக் கட்டுரைகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளியை முன்னிட்டு ரூ.10 கோடிக்கு பால்கோவா விற்பனை: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

பால்கோவா இந்த ஆண்டில் கிலோவுக்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.400 என்ற அளவில் விற்பனையாகிறது.

விருதுநகர்,

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை ரூ.10 கோடியை தாண்டும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், சுவையான பால்கோவாவும்தான். ஆண்டாளுக்கு பிடித்த உணவாக படைக்கப்படும் திரட்டிப்பால் என்ற உணவே பால்கோவா என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு என தனி மவுசு உண்டு. வேறு எங்கு தயாரித்தாலும் அதன் சுவை வராது என்பார்கள்.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவாவை போன்று பால் கேக், பால் அல்வா, கேரட் பால்கோவா, கருப்பட்டி பால்கோவா உள்ளிட்டவையும் பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு என புவிசார் குறியீடும் உள்ளது. அங்கிருந்து வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஆர்டரின்பேரில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பால்கோவா தயாரிப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

களைகட்டிய விற்பனை

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் விற்பனை களைகட்டி உள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் உற்பத்தியில் தொழிலாளர்கள் விடிய, விடிய ஈடுபட்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பால்கோவாவை தீபாவளி பரிசாக வழங்குவதற்கு பலவித எடைகளில் மொத்த ஆர்டர்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கான உற்பத்தியும், அனுப்பி வைப்பும் மும்முரமாக நடந்து வருகிறது.

பால்கோவா கிலோ ரூ.400க்கு விற்பனை

தீபாவளியை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் விற்பனை அதிகமாக உள்ளதாக பால்கோவா உற்பத்தியாளர் திருப்பதி ராஜா கூறினார். மேலும் அவர் கூறும்போது, "கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் பால்கோவா கிலோவுக்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.400 என்ற அளவில் விற்பனையாகிறது. சீனி, பால் விலை உயர்வு காரணமாக இந்த விலை ஏற்றம் உள்ளது. அதே நேரத்தில் பால் தட்டுப்பாடும் இருக்கிறது ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் விலை 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு லிட்டர் ரூ.50-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.60-க்கு விற்பனையாகிறது. சீனி கிலோ ரூ.72-ஆக உள்ளது. இதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது," என்றார்.

ரூ.10 கோடியை தாண்டும்

இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு பால்கோவா விற்பனை ரூ.10 கோடியை தாண்டிவிடும் என்றும், இது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் உற்பத்தியாளர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT