கருப்பு மற்றும் வெள்ளை நிற கொண்டைக்கடலைகளில் எது உடல்நலனுக்கு மிகவும் சிறந்தது? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
கொண்டைக்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் கொண்டைக்கடலை பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. அவற்றுள் எதை உட்கொள்வது நல்லது என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இரண்டின் சிறப்பம்சங்கள் பற்றியும், யார் எதை தேர்வு செய்வது சிறந்தது என்பது பற்றியும் பார்ப்போமா?
கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக்கடலை இரண்டிலும் புரதச்சத்து அதிகமாக கலந்திருக்கும். சில ஆய்வுகளின்படி கருப்பு கொண்டைக்கடலையில் புரதம் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்பட்டாலும் பெரிய மாறுபாடு இருக்காது. எனவே இரண்டுமே தாவர வகை புரதம் மிகுந்த உணவுகளாக கருதப்படுகின்றன.
கருப்பு கொண்டைக்கடலையின் வெளிப்புற தோல் தடிமனாக இருப்பதால் அதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளடங்கி இருக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். செரிமானம் சீராக நடைபெற உதவும். மலச்சிக்கலை தடுக்கவும் உதவிடும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் துணை புரியும்.
இரண்டு வகை கொண்டைக்கடலையும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவை. இருப்பினும், அதிக நார்ச்சத்து மற்றும் பாலிபீனால்களை கொண்டிருப்பதால் கருப்பு கொண்டைக்கடலை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவக்கூடும்.
கருப்பு கொண்டைக்கடலையின் கருமை நிற தோலில் ஆன்டி ஆக்சிடென்டுகள், பிளாவனாய்டுகள் போன்ற தாவர சேர்மங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை உடலில் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவக்கூடும். அதேவேளையில், இரண்டு வகை கொண்டைக்கடலையையும் சீரான அளவில் உட்கொள்வது இதய நலனுக்கு நல்லது.
கருப்பு கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து மற்றும் சில தாதுக்கள் சற்று அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரும்புச்சத்தை உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு, வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் கருப்பு கொண்டைக்கடலையை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
கருப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சிலருக்கு வயிற்று உப்புசம் அல்லது வாயுத்தொல்லை ஏற்படலாம். வெள்ளை கொண்டைக்கடலையின் தோல் மென்மையாக இருப்பதால் சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடும். இரண்டு வகை கொண்டைக்கடலையையும் இரவு முழுவதும் ஊறவைத்து, நன்றாக வேகவைத்து சாப்பிட்டால் செரிமான கோளாறு பிரச்சினைகள் குறையக்கூடும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இரண்டு வகை கொண்டைக்கடலையும் உட்கொள்ளலாம். இருப்பினும், அதிக நார்ச்சத்து மற்றும் சற்று குறைந்த கிளைசெமிக் கொண்டிருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கருப்பு கொண்டைக்கடலையே சிறந்த தேர்வாக அமையும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்களும், அதிக நார்ச்சத்தை எதிர்பார்ப்பவர்களும் கருப்பு கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம்.
எளிதில் செரிமானம் நடக்க விரும்புபவர்கள் வெள்ளை கொண்டைக்கடலையை தேர்வு செய்யலாம். எந்த வகையைத் தேர்வு செய்தாலும், அளவோடு சாப்பிடுவதும், காய்கறிகளுடன் சேர்த்து சமச்சீரான உணவுமுறையை பின்பற்றுவதும்தான் முழுமையான ஆரோக்கியத்திற்கு சிறந்த வழியாகும்.