மிர்சாபூர்
நாய் கடித்த பின் குரைக்க தொடங்கிய சிறுவனை, டாக்டர்கள் கைவிட்டபோதும் 22 நாட்களுக்கு பின் மீண்ட அதிசயம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் வசித்து வரும் சிறுவன் கரண். பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் கரண், வாரணாசி நகரில் உள்ள அனில் என்ற மாமா வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது, 5 வயதுடைய குழந்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் விளையாடி கொண்டிருந்தது.
அதனை பிடித்து கரண் இழுக்க முற்பட்டபோது, குழந்தையை அடிக்க முயல்கிறான் என நினைத்து வளர்ப்பு நாய் கரணை கடித்து விட்டது. இதனை அறிந்து பதறிப்போன கரணின் தந்தை உடனே அவனை டாக்டரிடம் கொண்டு சென்றார். சிறுவனுக்கு டெட்டனஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், தந்தையுடன் கரண் வீடு திரும்பினான். அவன், ரேபிஸ் நோய் பற்றி அறிந்திருக்கிறான். அது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிந்திருக்கிறான்.
இதனால், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அதற்கான ஊசி போட சென்றிருக்கிறான். ஆனால், கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது, மருத்துவ ஊழியர் ஒருவர் கரணிடம், நீதான் டெட்டனஸ் தடுப்பூசி போட்டு விட்டாய் அல்லவா? உனக்கு ரேபிஸ் ஒன்றும் செய்யாது என கூறியுள்ளார். இதனால், அதனை நம்பி கரண் வீட்டுக்கு திரும்பி விட்டான்.
அவன் அவ்வப்போது சிறு சிறு வேலைக்கும் சென்று வந்துள்ளான். 4 மாதங்களாக சிறுவனுக்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. ஆனால் மார்ச் மாதம் 13-ந்தேதி மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். உடனடியாக குடும்பத்தினர் அவனுக்கு மருந்து கொடுத்தனர். இதனால், சரியானது போன்று இருந்தது.
அடுத்த நாள் காலை திரும்பவும் மயக்கம் போட்ட கரண், பின்னர் நாய் போன்று குரைக்க தொடங்கினான். சரியாக பேசவும் முடியவில்லை. அவனால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. வாயில் இருந்து எச்சில் வடிந்தபடி இருந்தது. இதனால், குடும்பத்தினர் பயந்து போய் விட்டனர். கரண், நாய் போன்று குரைக்கும் வீடியோவும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இது ஏதோ, இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயம் என நினைத்து கச்வா பஜாரில் உள்ள ராமர் கோவிலுக்கு கூட்டி சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நிலைமை மோசமடையவே, மருத்துவமனைக்கு கரணை கொண்டு சென்றனர். பல மருத்துவமனைகளுக்கு சென்றும் பலனில்லை. டாக்டர்கள் பலரும் உயர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி விட்டனர். அதற்குள் இரவு நேரம் வந்தது. இதனால், அவர்கள் வீடு திரும்பினர்.
கரண் தொடர்ந்து இரவு முழுவதும் குரைத்து கொண்டே இருந்துள்ளான். மறுநாள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வாரணாசிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் அவனை கவனித்து விட்டு, குடும்பத்தினரிடம் பேசுகிறார். அவை எல்லாவற்றையும் கரணால் புரிந்து கொள்ள முடிந்தது.
டாக்டர், கரணை இருட்டு அறையில் தனியாக பூட்டி வையுங்கள் என்றும் கரண் பிழைப்பது கடினம் என்றும், அவனிடம் இருந்து அனைவரும் விலகி இருங்கள் என்றும் கூறினார். அவனை யாரும் தொட வேண்டாம் என்றும் 3 முதல் 4 நாட்களில் கரண் இறந்து விடுவான் என்றும் கூறியுள்ளார்.
ஏனெனில், அப்போது கரண் மற்றவர்களை கடிக்க முயற்சிக்கும் நிலைக்கு சென்று விட்டான். அது ரேபிஸ் நோயின் இறுதி கட்டம் என டாக்டர்கள் நினைத்து விட்டனர். இதனை கேட்டு கரண் குடும்பத்தினர் உடைந்து போய் விட்டனர். எனினும் கரணை வீட்டுக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம் என கூறினர்.
இதனால், கரணை கபில் சவுரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் அறிவுறுத்தினார். இதன்பின்னர் 2 மருத்துவமனைகளுக்கு சென்றும் டாக்டர்கள் எல்லோரும் நம்பிக்கையில்லை என தெரிவித்து விட்டனர்.
இதன்பின்னர் சொந்தக்காரரான சுமன் என்பவர் முதன்மை சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரிடம் கரணை கொண்டு சென்றனர். அவர் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தினார். 3 நாட்கள் கழித்து, ஒரு தடுப்பூசியும், ஒரு வாரம் கழித்து 3-வது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அடுத்த 2 வாரங்களில் 2 தடுப்பூசிகள் போடப்பட்டன.
மொத்தம் 22 நாட்களில் 5 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனால், கரண் குணமடைய தொடங்கினான். கரணை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கரணுக்கு அறிகுறிகள் தென்பட்டன. டாக்டரிடம் கொண்டு சென்று ஒரு வார இடைவேளையில் 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போது கரண் உடல் நலத்துடன் இருக்கிறான். ஒரு கட்டத்தில் பிறரை கடிக்க முயன்றும், இருட்டு அறையில் அடைக்கப்பட்டும் இருந்த கரண், தற்போது சக மாணவர்களுடன் ஒன்றாக பழகுகிறான்.
ஆசிரியர்களும் அவனிடம் வழக்கம்போல் பேசுகின்றனர். நடந்து கொள்கின்றனர். தீர்க்க முடியாத நோயாக ரேபிஸ் நோய் இருந்தபோதும், கரணுக்கு எப்படி உடல்நலம் தேறியது? என்று மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் தேவேந்திர பிரதாப் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, நாய் கடித்த இடம் மற்றும் அறிகுறிகளுக்கான நேரம் ஆகியவை விரைவாக ரேபிஸ் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன. கரணை கையில் கடித்துள்ளது. இதனால், அறிகுறிகள் வெளிப்பட நீண்ட நாட்கள் ஆகியுள்ளன. கழுத்து, நெஞ்சு பகுதியில் நாய் கடி இருந்தது என்றால், பிழைப்பது கடினம். மற்றொரு காரணம், அந்த நாய் வளர்ப்பு நாயாக உள்ளது.
இதனால், அதற்கு முன்பே ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கலாம். இதனாலேயே, 4 மாதங்கள் கழித்து கரணுக்கு அறிகுறிகள் தெரிய வந்துள்ளன என்றார். தவிர, கரணுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்க கூடும். நாய் கடி பற்றி படித்த மற்றும் கேட்ட விஷயங்களை பற்றி அவன் நினைவுகூர்ந்து பார்த்திருக்கலாம். இதனால், அவன் குரைக்க தொடங்கியிருக்கலாம்.
இது, டாக்டர்கள் அவனை பற்றி ஒரு முடிவுக்கு வர காரணியாக இருந்திருக்கலாம் என்றார். எனினும், கரணின் வழக்கு தனித்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதனால், விரிவாக ஆய்வு செய்வதன் வழியே மட்டுமே, பல்வேறு விஷயங்களை நாம் தெளிவுப்படுத்த முடியும் என்றார். ரேபிஸ் பாதிப்புக்கு ஆளாகி, டாக்டரால் கைவிடப்பட்டு, இருட்டு அறையில் தள்ளப்பட்ட பள்ளி மாணவன் ஒருவன் அதில் இருந்து 22 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்திருப்பது டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.