தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், 12-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இந்த தேர்தலில் த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் த.வெ.க. 108, தி.மு.க. கூட்டணி 73, அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை கைப்பற்றின.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய 5 கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அரியணை ஏறியது. தற்போது, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி.மு.க. கூட்டணியைவிட்டே வெளியேறிவிட்டன. அதே நேரத்தில், தேர்தலுக்கு முன்பே உள்கட்சி பூசலால் தவித்த அ.தி.மு.க., தேர்தல் தோல்விக்கு பிறகு மேலும் பின்னடைவை சந்தித்தது.
அ.தி.மு.க. சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், மேற்கண்ட 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே, 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.
இப்படி, தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்த தொகுதிகள் 7. பொதுவாக, காலியாகும் தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த 5 தொகுதிகளுடன் சேர்த்தே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதால், 7 தொகுதிகளின் இடைத்தேர்தலும் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்றாலும், குறிப்பிட்ட காலமான 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்று சொல்வார்கள். அதாவது, புதிய அரசு பதவியேற்ற காலத்தில் இருந்து இடைத்தேர்தல் நடைபெறும் காலம் வரை எவ்வாறு செயல்பட்டது?, மக்கள் மனதில் எந்த அளவுக்கு இடம்பிடித்தது? என்பதைப் பொறுத்தே இடைத்தேர்தல் முடிவுகள் அமையும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில், ஒரு சில தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடியப்போகிறது. இன்னும் 100 நாட்களை கூட எட்டவில்லை. ஊழல் ஒழிப்பை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.
இது மக்கள் மத்தியில் த.வெ.க.வுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, கூடுதல் மின் கட்டணம் வசூல் புகார் போன்றவை ஆளுங்கட்சிக்கு சற்று கெட்டப் பெயரையே ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். த.வெ.க. அரசின் ஒவ்வொரு நாள் செயல்பாட்டையும் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால், தமிழக அரசியலில் தினமும் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
தற்போதைய நிலையில், த.வெ.க.வுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் (5), இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி (2) ஆகியவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றாலும், ஏனைய 3 கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக்கொள்ளும் நிலை இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இடைத்தேர்தலில் 7 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
இனி தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பதை ஒவ்வொரு தொகுதியாக பார்ப்போம்.
திருச்சி கிழக்கு தொகுதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தற்போது, அந்த தொகுதியில், மாற்றுக்கட்சியில் இருந்து த.வெ.க.வில் இணைந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தெரிகிறது. அதனால், த.வெ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே திருச்சி கிழக்கு தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இவர் தி.மு.க. வேட்பாளர் செல்ல பாண்டியனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
விராலிமலை தொகுதியில் டாக்டர் விஜயபாஸ்கருக்கு என்று கட்சியை தாண்டிய தனி செல்வாக்கு உள்ளது. சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் 43,700 வாக்குகளை பெற்றிருக்கிறார். எனவே, த.வெ.க. சார்பில் டாக்டர் விஜயபாஸ்கர் களம் இறக்கப்பட்டால், மீண்டும் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. த.வெ.க. வேட்பாளர் வி.பி.மதியழகனை 1,821 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்கடித்து இருக்கிறார்.
இந்த முறை த.வெ.க. சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் களம் இறக்கப்பட்டால், கடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு கிடைத்த வாக்குகள் 69,721-ம் இவருக்கே கிடைக்கும் என்பதால், வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. என்றாலும், எதிர்த்து நிற்கப்போகும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்? என்பதை பொறுத்தே இது அமையும்.
அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து 2-வது முறையாக மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. த.வெ.க. வேட்பாளரை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இடைத்தேர்தலில் இவருக்கு த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு கிடைத்த 62,090 வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இவரே வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. ஆனாலும், தி.மு.க. - அ.தி.மு.க. வலுவான வேட்பாளர்களை நிறுத்தினால், வெற்றி என்பது மதில்மேல் பூனை போல் அமைந்துவிடக்கூடும்.
சட்டசபை தேர்தலில் அதி.மு.க. சார்பில் திலகபாமா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. தி.மு.க. வேட்பாளர் இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு த.வெ.க. வேட்பாளர் 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளார்.
எனவே, இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளராக திலகபாமா களம் இறக்கப்பட்டால், அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது வெற்றியை தேடித்தருமா? என்பது எதிர்த்து நிற்பவர்களை பொறுத்தே இருக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. தி.மு.க. வேட்பாளர் தோப்பு வெங்கடாசலத்தை 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு த.வெ.க. வேட்பாளர் 59,483 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
இடைத்தேர்தலில், த.வெ.க. சார்பில் எஸ்.ஜெயக்குமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருத்தப்பட்டாலும், தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய தோப்பு வெங்கடாசலமும் த.வெ.க.வில் இணைய திட்டமிட்டு இருப்பதால், முதலில் யாருக்கு 'சீட்' கிடைக்கப்போகிறது? என்றே தெரியவில்லை. எனவே, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகே வெற்றியை கணிக்க முடியும்.
அ.தி.மு.க. வேட்பாளராக இசக்கி சுப்பையா தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு த.வெ.க. வேட்பாளர் 53,611 வாக்குகளை பெற்றிருக்கிறார்.தற்போது, காங்கிரசும் த.வெ.க. கூட்டணியில் இணைந்திருக்கிறது. எனவே, த.வெ.க. சார்பில் இசக்கி சுப்பையா களம் இறக்கப்பட்டால், வெற்றி எளிதுபோல் தெரிந்தாலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால், இருவருக்கும் இடையே போட்டி பலமாகவே இருக்கும் என்றே தெரிகிறது. அதுவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டால், இசக்கி சுப்பையாவுக்கு சிக்கல்தான்.