Image Credits: AI 
சிறப்புக் கட்டுரைகள்

சார்ஜ் போட்டுக் கொண்டே லேப்டாப் யூஸ் பண்ணலாமா? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க

லேப்டாப் பயன்படுத்தும் பலரும் சார்ஜரை கழற்றாமல் பயன்படுத்துவதை அதிகம் பார்க்க முடியும்.

மக்களிடையே தற்போது லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்புகள், திரைப்படங்கள் பார்ப்பது என பல காரணங்களுக்காக லேப்டாப் பயன்படுத்துகிறார்கள். லேப்டாப் பயன்படுத்தும் போது அடிக்கடி சார்ஜ் இறங்கும் என்பதால், பலரும் சார்ஜரை எப்போதும் கழற்றாமல் பயன்படுத்துவதை பார்க்க முடியும். ஆனால், இது பேட்டரியின் ஆயுளை பாதிக்குமா என்ற சந்தேகம் லேப்டாப் யூசர்களிடையே உள்ளது.

இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். இன்றைய நவீன லேப்டாப்களில் பேட்டரி முழுமையாக 100 சதவீதம் சார்ஜ் ஆனவுடன், தானாகவே சார்ஜ் நிறுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. எனவே, முன்பு இருந்ததைப் போல அதிகப்படியான சார்ஜ் ஏறி பேட்டரி சேதமடையும் அபாயம் தற்போது இல்லை என்கிறார்கள்.

அதே நேரத்தில், நீண்ட நேரம் தொடர்ந்து 100 சதவீத சார்ஜ் நிலையில் வைத்திருப்பது மற்றும் அதிக வெப்பம் ஆகியவை லித்தியம்-அயன் பேட்டரியின் ஆயுளை மெதுவாக குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிசிக்கல் கெமிஸ்ட்ரி கெமிக்கல் பிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியான அறிக்கையில், அதிக வெப்பமும், முழு சார்ஜ் நிலையிலும் நீண்ட நேரம் இருப்பதும் பேட்டரிக்குள் வேதியியல் அழுத்தத்தை அதிகரித்து, அதன் செயல்திறனை விரைவாகக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Image Credits: AI

லேப்டாப்பை படுக்கை, தலையணை, போர்வை போன்ற மென்மையான பரப்புகளில் வைத்து பயன்படுத்தும்போது வெப்பம் வெளியேறாமல் உள்ளேயே தேங்குகிறது. அதேபோல், வீடியோ எடிட்டிங், கேமிங், கிராபிக்ஸ் வடிவமைப்பு போன்ற அதிக திறன் தேவைப்படும் பணிகளை சார்ஜரில் இணைத்தபடியே நீண்ட நேரம் செய்தால், பேட்டரியின் வெப்பநிலை மேலும் உயரும். இந்த இரண்டு காரணங்களும் சேரும்போது பேட்டரியின் ஆயுள் வேகமாக குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேட்டரியின் நீண்ட நாள் நீடித்து இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், முடிந்தவரை சார்ஜ் அளவை 40 முதல் 80 சதவீதத்துக்குள் வைத்திருப்பது நல்லது. லேப்டாப்பில் உள்ள பேட்டரி கேர் அல்லது Battery Conservation Mode வசதியை பயன்படுத்துவது பயனளிக்கும் லேப்டாப்பை எப்போதும் சமதள மேசையில் வைத்து பயன்படுத்த வேண்டும். பல நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்க வேண்டிய சூழலில், 100 சதவீத சார்ஜ் நிலையில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும் இன்றைய பெரும்பாலான லேப்டாப்களில் பேட்டரி ஹெல்த் எவ்வளவு உள்ளது என்பதை அறியும் வசதியும் உள்ளது. எனவே, பேட்டரி நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்து வந்தால், அதன் செயல்திறன் குறைவதை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.