சிறப்புக் கட்டுரைகள்

பெயர் மாறிய உலக நாடுகள்: காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயர் ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்யப்படுமா? என்று முன்வைக்கப்படும் கேள்வி விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உலக நாடுகள் அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக பெயர் மாற்றங்களை கண்டுள்ளன. அவ்வாறு அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் பெற்ற சில நாடுகளின் பட்டியலையும் அதற்கான காரணத்தையும் காண்போம்.

உலகளவில் நாடுகளின் பெயர் மாற்றங்கள்; அதற்கான காரணங்கள்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயர் ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்யப்படுமா? என்று முன்வைக்கப்படும் கேள்வி விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உலக நாடுகள் அரசியல், சமூகம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக பெயர் மாற்றங்களை கண்டுள்ளன. அவ்வாறு அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் பெற்ற சில நாடுகளின் பட்டியலையும் அதற்கான காரணத்தையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

1. இலங்கை (சிலோன்)

பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் சிலோன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1972-ம் ஆண்டு சிலோன் தேசம் என்ற பெயரை `இலங்கை’ என்று பெயர் மாற்றம் செய்தது. இலங்கை என்பது சிங்கள மொழியில் ‘ஒளிரும் நிலம்’ என்று பொருள்படும்.

2. மியான்மர் (பர்மா)

இந்த தென்கிழக்கு ஆசிய நாடு பர்மா என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1989-ம் ஆண்டு அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது `மியான்மர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றம் சர்வதேச அளவில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்திந்தது. இதனால் இன்றளவும் பல ஆசிய நாடுகள் இந்நாட்டின் பெயரை பர்மா என்றே அழைக்க விரும்புகின்றனர்.

3. தாய்லாந்து (சியாம்)

தாய்லாந்து, 1939-ம் ஆண்டு வரை `சியாம்’ என்றே அறியப்பட்டது. ‘தாய்லாந்து’ என்பதற்கு ‘சுதந்திர நாடு’ என்று பொருள். நாட்டின் சுதந்திரத்தை வலியுறுத்துவதற்காகவும், ஒற்றுமை மற்றும் அடையாளத்தை நோக்கமாக கொண்டும் தாய்லாந்து என்ற புதிய பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

4. வடக்கு மாசிடோனியா குடியரசு (மாசிடோனியா குடியரசு)

2019-ம் ஆண்டு மாசிடோனியா குடியரசு, அதன் பெயரை `வடக்கு மாசிடோனியா குடியரசு’ என மாற்றியது. இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் நேட்டோவின் ஒரு பகுதியாக மாறுவதும், அதன் அண்டை நாடான கிரீஸிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதற்காகவும் முதன்மை காரணமாக அமைந்தது.

5. காங்கோ ஜனநாயகக் குடியரசு (ஜைர்)

1997-ம் ஆண்டில், தொடர்ச்சியாக நடந்த அரசியல் மோதல்களுக்குப் பிறகு `ஜைர்’ அதன் பெயரை காங்கோ ஜனநாயகக் குடியரசு என்று மாற்றியது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சர்வாதிகாரியாக ஆட்சி செய்த மொபுடு செசே செகோவின் ஆட்சியில் இருந்து நாட்டை பாதுகாக்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய பெயர் ஜனநாயக ஆட்சி முறைக்கு திரும்புவதை வலியுறுத்தியது.

6. வங்காள தேசம் (கிழக்கு பாகிஸ்தான்)

1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் தலையீட்டின்படி நடந்த போரைத் தொடர்ந்து மேற்கு பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன் விளைவாக வங்காள தேசம் என்ற புதிய நாடு உருவானது.

7. ஈஸ்வதினி (சுவாசிலாந்து)

2018-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தின் மன்னர் அதிகாரப்பூர்வமாக நாட்டின் பெயரை `ஈஸ்வதினி’ என மாற்றுவதாக அறிவித்தார். சுவாசிலாந்துக்கும், சுவிட்சர்லாந்திற்கும் இடையே குழப்பத்தைத் தவிர்க்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

8. நெதர்லாந்து (ஹாலந்து)

கடந்த ஜனவரி 2020-ம் ஆண்டு சந்தைப்படுத்துதல் நடவடிக்கைக்காக, ஹாலந்து நாட்டை `நெதர்லாந்து’ என அரசு அதிகாரபூர்வமாக மாற்றியது.

9. துருக்கியே (துருக்கி)

2022-ம் ஆண்டில், துருக்கி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக `துருக்கியே’ என மாற்றியதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்தது. துருக்கியே என்ற சொல் நாட்டின் கலாசாரம், மதிப்புகள் மற்றும் நாகரிகத்தை சிறந்த முறையில் பிரதிபலிக்கும் என்றும் அறிவித்தது.

10. ஈரான் (பெர்சியா)

நவீன கால ஈரான் 1935-ம் ஆண்டு வரை வரலாற்று ரீதியாக `பெர்சியா’ என்று அழைக்கப்பட்டது. நாட்டிற்கான புதிய தொடக்கத்தை குறிக்கும் வகையில் ஈரான் என்ற பெயர் அப்போதைய மன்னர் ரேசா ஷாவால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இலக்கியங்களில் பாரசீகம் என்றே குறிப்பிடப்படுகின்றன.