பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்தது. பட்டு கண்டுபிடிக்கப்பட்ட அதே நூற்றாண்டில் சீனாவிலும் பட்டு உற்பத்தி பெரும் வளர்ச்சி அடைந்தது. மேலை நாடுகளுக்கும் பட்டு நூல் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் வியாபார ரீதியாக இணைத்ததில் பட்டுக்கு பெரும் பங்கு உண்டு.
பட்டுத் தொழில்நுட்பம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்துவிட்டது. படிப்படியாக இந்த நுட்பம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. இன்று பட்டு உற்பத்தியில் சீனாதான் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா, உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்நாம், ஈரான் என 30-க்கும் மேற்பட்ட நாடுகளும் குறிப்பிடத்தகுந்த வகையில் உற்பத்தி செய்கின்றன.
பண்டைய இந்திய மன்னரான கனிஷ்கர் காலத்தில், கி.மு. 58-ல், இந்தியாவில் இருந்து பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது. கி.பி.16-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் அப்போது சீனாவுக்கு நிகராக இந்தியாவும் பட்டு ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது.
இன்று இந்தியாவில் 15 ஆயிரம் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் கர்நாடகம். இதற்கு காரணம் திப்பு சுல்தான். அவர்தான் 18-ம் நூற்றாண்டிலேயே மைசூருவில் பட்டுப்புழு உற்பத்தி நிலையங்களை அமைத்தார். கர்நாடகத்துக்கு அடுத்த நிலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜம்மு- காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்த தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியா, உலக அளவில் பட்டு உற்பத்தியில் 2-ம் இடம் வகித்தாலும் நமது உற்பத்தி எல்லாம் சொந்த உபயோகத்துக்கே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்களின் பட்டுத் தேவை ஆண்டுக்கு 26 ஆயிரம் டன் ஆகும்.