சிறப்புக் கட்டுரைகள்

தீபாவளி ஸ்பெஷல்: ’பாட்டி கை மணக்கும்’ அதிரசம் செய்வது எப்படி..?

அரிசியை கையில் எடுக்கும்போது ஈரம் ஒட்டக்கூடாது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் 'பாட்டி கை மணக்கும்' அதிரசம் செய்வது எப்படி? என்பதை காண்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

வெல்லம் - 1 கிலோ

ஏலக்காய் - 7 (பொடியாக்கிக்கொள்ளவும்)

கடலை எண்ணெய் - பொறித்து எடுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, அரிசியை தண்ணீர் போக வடித்து எடுத்து, ஒரு துணியில் ஈரம் போகும் வரை உலர வைக்க வேண்டும். அரிசியை கையில் எடுக்கும்போது ஈரம் ஒட்டக்கூடாது. அதுதான் சரியான பதம் ஆகும்.

இந்த அரிசியை மிக்சி ஜாரில் போட்டு சரசரவென அரைத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு பக்கம், வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனை பாகுவாக காய்ச்சவும். பாகு பதம் எப்படி பார்க்க வேண்டும் என்றால், அதில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் சேர்த்தால் அது உருண்டு வர வேண்டும். அந்த பதத்திற்கு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

காய்ச்சிய வெல்லப் பாகில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அதனுடன் ஏலக்காய் பொடியையும் தூவி நன்கு பதம் வரும் வரை கிளறவும். பிறகு, பாகு மாவு நன்கு ஆறியதும் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து காற்று போகாதவாறு மூடிவைக்கவும். ஒரு நாட்கள் கழித்து இந்த மாவை எடுக்கவும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கையில் வட்ட வடிவமாக தட்டி, நடுவில் துளை போட்டு காய்ந்த எண்ணெய்யில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவந்து வரும் வரை திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான அதிரசம் ரெடி.

(மீள்பதிவு)

SCROLL FOR NEXT