சிறப்புக் கட்டுரைகள்

முதல்-அமைச்சர் விஜய் அணிந்து வந்த பெல்ட்டின் விலை என்ன தெரியுமா?

திரைத்துறையில் இருந்து விஜய் வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு நாளும் அவர் அணியும் ஆடை பேசுபொருளாகிறது.

சென்னை,

சென்னையில் ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் விஜய் சென்றபோது, அவர் அணிந்திருந்த பெல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் விலையும் பேசு பொருளாகியுள்ளது.

வெள்ளை நிற வேட்டி-சட்டை

தமிழக அரசியல்வாதிகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் வேட்டி-சட்டை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். முதல்-அமைச்சர்களாக இருந்த காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அத்தனை பேரின் அடையாளமும் இதுதான்.

ஆனால், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், அதில் இருந்து சற்று மாறுபட்டு கோட் சூட் அணிந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் பட்டு வேட்டி-சட்டையில் வருகிறார்.

ஆடை குறித்த ஆராய்ச்சி

அதுவும் திரைத்துறையில் இருந்து அவர் வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு நாளும் அவர் அணியும் ஆடை பேசுபொருளாகிறது. இதனால், முதல்-அமைச்சர் விஜய் அணிந்து வரும் ஆடை குறித்து, அவருடைய ரசிகர்களும், நெட்டிசன்களும் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சைதாப்பேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியிலும், சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பெல்ட்டின் விலை என்ன தெரியுமா?

அந்த வகையில், சேத்துப்பட்டுக்கு அவர் கள ஆய்வுக்கு வந்தபோது, நீல நிற சட்டையை ‘டக்கிங்’ செய்து அணிந்திருந்தார். அந்த ஆடையைவிட, அவர் அணிந்திருந்த வித்தியாசமான பெல்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முதல்-அமைச்சர் விஜய் அணிந்திருந்த பெல்ட், பிரபல நிறுவனமான லூயிஸ் விட்டான் தயாரிப்பாகும். இந்த பெல்ட்டின் விலை குறித்து ரசிகர் ஒருவர் ‘க்ரோக்’ செயலியிடம் கேட்டபோது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 ஆயிரம் இருக்கும் என்று பதில் அளித்தது.

வழக்கமாக இந்த நிறுவனத்தின் பெல்டுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.