மெட்ரோ ரெயில் இன்று உலகின் பெருநகரங்களின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால், இந்த நிலத்தடி ரெயில் புரட்சிக்கு விதை போட்டது 1863-ம் ஆண்டில் லண்டனில் தொடங்கிய ஒரு சிறிய ரெயில் பாதை என்பது பலரும் அறியாத வரலாறு.
ஆம்..! உலகின் முதல் நிலத்தடி மெட்ரோ ரெயில் சேவை 1863-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி லண்டனில் தொடங்கியது. 'மெட்ரோபாலிட்டன் ரெயில்வே' என அழைக்கப்பட்ட இந்த முதல் பாதை, பாடிங்டன் முதல் பேரிங்டன் வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டது.
அப்போது சாலைகளைத் தோண்டி ரெயில் பாதை அமைத்து, பின்னர் மேல்பகுதியை மூடும் ‘கட் அண்ட் கவர் முறையில் இந்தப் பாதை உருவாக்கப்பட்டது. பின்னர் ஆழமான சுரங்கங்கள் அமைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து, 'டியூப்' ரெயில் அமைப்பு விரிவடைந்தது.
160 ஆண்டுகளுக்கும் மேலாகியும், லண்டன் அண்டர்கிரவுண்ட் இன்றும் முழுவீச்சில் இயங்கி வருகிறது. தற்போது 11 வழித்தடங்கள், 272 நிலையங்கள் மற்றும் சுமார் 402 கி.மீ. நீளமான பாதைகளைக் கொண்டுள்ள இது, தினமும் 50 லட்சம் பயணங்கள் வரை மேற்கொள்கிறது.
1863-ம் ஆண்டில் தொடங்கிய ஒரு சிறிய நிலத்தடி ரெயில் பாதை, இன்று உலகின் மிகப்பெரிய நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்திருப்பது உண்மையிலேயே வியப்புக்குரியது!
லண்டனில் முதன்முதலாக கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும் மின்சாரம் மூலம் ரெயிலை இயக்கவும் திட்டமிட்டு இந்த ரெயில் சேவை கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா, ஜப்பான், சீனா என வளர்ந்த நாடுகளுக்கு இந்த திட்டம் விரிவடைய தொடங்கியது.