சிறப்புக் கட்டுரைகள்

தாமதமாக தூங்கி, அதிகாலையில் எழுகிறீர்களா? நீங்கள்..!

எப்போதாவதோ, சில நாட்களோ குறைவான நேரம் தூங்குவது பெரிய பிரச்சினைகளை உண்டாக்காது.

சமூகவலைத்தள மோகம் பலரையும் தாமதமாக தூங்க செல்லும் வழக்கத்துக்கு தள்ளியிருக்கிறது. அப்படி தாமத மாக தூங்கி சீக்கிரமாக எழுவதால் போதுமான தூக்கம் கிடைத்துவிட்டது என்று அர்த்தமல்ல. தினமும் பெரியவர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியமானது. தொடர்ந்து குறைவான நேரம் தூங்கினால் உடல் மற்றும் மூளையின் இயல்பான செயல்பாடுகள் பாதிப்படையக்கூடும்.

போதுமான நேரம் உறங்காதது தூக்க குறைபாட்டிற்கு வித்திடும். பகலில் அதிக சோர்வு, கவனம் செலுத்துவதில் சிரமம், மறதி, முடிவெடுப்பதில் தடுமாற்றம், வேலைத்திறன் குறைதல், அதிகமாக காபி பருகுதல், பகலில் தூக்கம் வருதல் போன்றவை தூக்க குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளாக அமையும்.

இரவு நேர தூக்க நேரம் குறைவதால் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண் எரிச்சல், மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தூக்க குறைபாடு பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்தால் மனநலப் பிரச்சினைகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்க குறைபாடு உடலையும் பாதிப்புக்குள்ளாக்கும். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாத நிலை நீடிப்பது உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவில் மாற்றம், இதய-ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தூக்கக் குறைபாடு மட்டுமே இத்தகைய பாதிப்புகளுக்கு நேரடி காரணம் என்று கூறிவிட முடியாது. உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன அழுத்தம். இரவில் அதிக நேரம் செல்போன் திரையை பார்ப்பது. மாலை அல்லது இரவில் காபி உட்கொள்வது. ஒழுங்கற்ற வேலை நேரம், பதற்றம் போன்றவை தாமதமாக தூங்கி அதிகாலையில் எழுவதற்கு காரணமாக இருக்கலாம். தொடர்ந்து நள்ளிரவிலோ, அதிகாலையிலோ விழித்துவிட்டு மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்தை பெற தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வது. தூங்குவதற்கு முன்பு செல்போன் பார்ப்பதை குறைப்பது, மாலை நேரத்திற்கு பிறகு காபி மற்றும் காபின் கலந்த பானங்களை தவிர்ப்பது. படுக்கை அறையை இருள் சூழ்ந்தும், அமைதியாகவும் வைத்திருப்பது போன்ற பழக்கங்கள் உதவும்.

எப்போதாவதோ, சில நாட்களோ குறைவான நேரம் தூங்குவது பெரிய பிரச்சினைகளை உண்டாக்காது. ஆனால் பல வாரங்களாக தொடர்ந்து தூக்க குறைபாடு, அதிகாலை கண் விழிப்பு. பகலில் சோர்வு, கவனம் குறைதல், மனநிலை மாற்றம் போன்ற பாதிப்புகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

அதிகாலையில் எழும் வழக்கத்தை பின்பற்றுவது சிறந்ததுதான். ஆனால் உடலின் இயற்கையான தூக்க விழிப்பு சுழற்சிக்கும், போதுமான தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதாவது எப்போது தூங்குகிறோம் என்பதை காட்டிலும், போதுமான நேரம் ஆழ்ந்த தூக்கம் பெறுகிறோமா என்பதே முக்கியமானது.