சிறப்புக் கட்டுரைகள்

டாக்டர் ராமதாஸ் 37 ஆண்டுகள் கடந்து வந்த அரசியல் பாதை: சற்று பின்நோக்கி பார்ப்போமா?

தனது அரசியல் வாழ்வில், கடைசி வரை, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து டாக்டர் ராமதாஸ் மாறவே இல்லை.

சென்னை,

தனது 88-வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில், அவர் கடந்து வந்த 37 ஆண்டு கால அரசியல் பாதையை சற்று பின்நோக்கி பார்ப்போம்.

கீழ்சிவிரி கிராமம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 1939-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி, விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவர், 1959-1965-ம் ஆண்டு காலத்தில், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை மேற்கொண்டார். பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட அவர், உறவினர்கள், ஆசிரியர்களின் உதவியுடனேயே மருத்துவம் படித்து முடித்தார்.

3 ரூபாய் டாக்டர்

1965-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாஸ் மருத்துவராக பணிபுரிந்தார். பின்னர், தனியாக ஆஸ்பத்திரி தொடங்கிய அவர் 3 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்தார். இதனால், அவரை 3 ரூபாய் டாக்டர் என்றே மக்கள் அழைத்தனர்.

தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் ஏழை நோயாளிகள், பணம் இல்லை என்று கூறினால், இலவசமாகவே மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பினார். 10 ஆண்டுகளுக்கு பிறகே 5 ரூபாயாக சிகிச்சை கட்டணத்தை உயர்த்தினார்.

வன்னியர் இடஒதுக்கீடு

திண்டிவனம் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்களுக்கு டாக்டராக சிகிச்சை அளித்தபோதே, கல்வி-வேலை வாய்ப்பில் அவர்கள் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். இதனால், 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். அன்று முதல், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து போராடத் தொடங்கினார்.

1987-ம் ஆண்டு வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்தது. அந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியானார்கள். அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். மேலும், பல தலைவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தபோதும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

பா.ம.க. தொடக்கம்

1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, வன்னியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். இது டாக்டர் ராமதாசின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. வன்னியர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத்தந்தது.

அதனைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலாளராக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர்தான் வர முடியும் என்று கொள்கையை வகுத்தார். இளைஞரணி தலைவர் பொறுப்பிலும் இஸ்லாமியரையே வைத்தார்.

வாக்கு வங்கி

1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முதன் முதலாக பா.ம.க. எதிர்கொண்டது. 199 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த பா.ம.க., 116 இடங்களில் போட்டியிட்டு, அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. என்றாலும், 6 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்தது.

1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிட்டது. 5 இடங்களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த தலித் எழில்மலை மந்திரியானார்.

1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக டாக்டர் அன்புமணி பதவி வகித்தார்.

தி.மு.க. கூட்டணி

2006 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பா.ம.க., தமிழகத்தில் 6, புதுச்சேரியில் 1 இடம் என 7 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

2011 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. 30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்ற நிலையில், 8 இடங்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. கூட்டணி

2016 சட்டசபை தேர்தலின்போது, "இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தனியாக ஆட்சி அமைப்பதே இலக்கு" என்று, "மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி" என்ற முழக்கத்துடன் பா.ம.க. தனித்து போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. முதல்-அமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாசே தோல்வியடைந்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., 7 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டசபை தேர்தலில், அதே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்த பா.ம.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

சமச்சீர் கல்வி

2012-2014 காலக்கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் உருவாக்கிய அனைத்து சமுதாய பேரமைப்பு மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அவருக்கு கெட்டப் பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

தேர்தலை தாண்டி, பா.ம.க.வின் சாதனை என்று பார்த்தால், தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளை திறந்தது, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது, சமச்சீர் கல்வி அமல்படுத்த காரணமாக இருந்தது ஆகியவற்றை சொல்லலாம்.

மகன் அன்புமணி இடையே பிரச்சினை

மக்களுக்கான பிரச்சினைகள், ஆட்சியாளர்களின் நடவடிக்கை குறித்து உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டு சுட்டிக்காட்டிய டாக்டர் ராமதாஸ், பா.ம.க. சார்பில் 2002-ம் ஆண்டு முதல் நிழல் பட்ஜெட்டையும், 2008-ம் ஆண்டு முதல் வேளாண் நிழல் பட்ஜெட்டையும் வெளியிட்டு வருகிறார்.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே பிரச்சினை ஏற்பட்ட போதிலும், தேர்தலுக்கு பிறகு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இனி டாக்டர் அன்புமணியை கட்சியை நடத்துவார் என்று டாக்டர் ராமதாசே கூறிவிட்டார்.

ஆனாலும், தனது 37 ஆண்டு கால அரசியல் வாழ்வில், கடைசி வரை, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து டாக்டர் ராமதாஸ் மாறவே இல்லை.