பி மாரி 
சிறப்புக் கட்டுரைகள்

முயற்சி திருவினையாக்கும்; மிசோரம் பெண்ணின் ‘இனிப்பான’ வெற்றி!

பி மாரிக்கு அரசு பணியில் சேர ஆசை. ஆனால் பலமுறை அரசு பணி தேர்வு எழுதியபோதிலும் வெற்றி கிட்டவில்லை.

விவசாயத்தில் வெகு எதேச்சையாக இறங்கிய மிசோரம் பெண், தித்திப்பான ஸ்டிராபெர்ரி பழங்களை விளைவித்து சாதனை படைத்திருக்கிறார். சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.தோல்வியில் துவளாமல், மாற்றி யோசிப்பவர்களும், விடாது முயற்சி செய்பவர்களும் வெற்றி பெற்றே தீர்வார்கள் என்று நிரூபித்திருக்கிறார் அவர்.

தோல்வியில் தொடங்கிய பயணம்

பி மாரிக்கு அரசு பணியில் சேர ஆசை. ஆனால் பலமுறை அரசு பணி தேர்வு எழுதியபோதிலும் வெற்றி கிட்டவில்லை. தற்காலிகமாக, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். இவரது கணவர் அரசுப் பள்ளி ஆசிரியர் என்பதால் குடும்ப வண்டியை நகர்த்துவதில் சிரமம் இல்லை. ஆனாலும் சொந்தமாய் நல்ல வருவாய் ஈட்ட விரும்பிய பி மாரி, விவசாயத்தின் பக்கம் கவனத்தை திருப்பினார்.

'யூடியூப்' மூலம் கற்றார்

யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலரும் பொழுதுபோக்குக்கு பயன்படுத்துகையில், அதை தனது வாழ்க்கையை மாற்ற உபயோகிக்க முடிவெடுத்தார் பி மாரி. மூன்று குழந்தைகளின் தாயான இவருக்கு. ஆசிரிய பணி, வீட்டு வேலைக்கு பின், இரவில் வெகு நேரம் கழித்துத்தான் நேரம் கிடைக்கும். அப்போது 'யூடியூப்' பார்த்து விவசாய பணிகளை அறிந்தார்.

அரசு கைவிரித்தாலும்...: என்ன விவசாயம் செய்யலாம் என்று யோசித்தவருக்கு. அண்டை மாவட்ட விவசாயிகள் ஸ்டி ராபெர்ரி விவசாயத்தை சிறப்பாக செய்வது தெரியவந்தது. தானும் ஸ்டிராபெர்ரி விவசாயத்தில் ஈடுபட விரும்பி பி மாரி அரசு துறையை அணுகியபோது கைவிரித்து விட்டது. எனவே தானே களத்தில் இறங்க தீர்மானித்துவிட்டார்.

ஒரு லட்சம், 10 லட்சமானது

தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 2 எக்டேர் நிலத்தில், ஸ்டிராபெர்ரி கன்றுகளை நட்டு பராமரிக்க தொடங்கினார். அதில், முதலாண்டான 2024-ல் ஒன்றரை லட்சம் வருமானம் கிடைத்தது. அது செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு, ரூ.10 லட்சமாக பல மடங்கு வருமானம் அதிகரித்துள்ளது.

விருது அங்கீகாரம்

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய உணவு அமைப்புகள் மற்றும் ஊரக மேம்பாட்டில் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பி மாரியை தேர்வு செய்து விருது அளித்துக் கவுரவித்தது. 131 நாடுகளை சேர்ந்த 600 பெண்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வான இரண்டே பெண்களில் பி மாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவடைந்த விவசாயம்

ஸ்டிராபெர்ரி விவசாயத்தில் கிடைத்த வெற்றியால், அந்த செடிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன், வாழைப்பழம், வெண்ணெய்ப்பழம் மற்றும் பிற பழங்கள், காய்கறிகளையும் ஏராளமாய் விளைவிக்க தொடங்கியிருக்கிறார், பி மாரி. தற்போது இவருடன் குடும்பமே சேர்ந்து உழைக்கிறது.

வெற்றியின் ரகசியம்

விவசாயத்தின் அரிச்சுவடியே அறியாத பி மாரி, அதில் வெற்றி பெற்றதற்கான ரகசியமாக கூறு வது: 'நான் என் மீது கொண்ட நம்பிக்கையும், எங்கள் குடும்பத்தின் ஆதரவும்'. தான் என்று கூறினார்.

SCROLL FOR NEXT