'எல்நினோ' தாக்கம் பனைத்தொழிலையும் விட்டு வைக்கவில்லை. மழை குறைவால் பதநீர் குறைந்து, கருப்பட்டி விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது.
இந்த ஆண்டு பருவகால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் 'எல்நினோ' பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில்தான் பனைத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை குறிப்பிட்டு கூறலாம்.
தமிழகத்தில் அதிக பனை மரங்களை கொண்ட மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது. அங்கு சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பதநீர் சீசன் தொடங்கிவிடும். பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயார் செய்கின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து கருப்பட்டிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கருப்பட்டிகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்த ஆண்டு தயார் செய்த கருப்பட்டிகளைவிட, கடந்த ஆண்டுக்குரிய கருப்பட்டிக்கு விலையும். சுவையும் அதிகம்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டி தனி சிறப்பு பெற்றது. அளவில் சிறியதாக இருக்கும். சாயல்குடி கருப்பட்டிகளைவிட, உடன்குடி கருப்பட்டிக்கு விலை அதிகம். இதுபோல் பனங்கற்கண்டு. பனஞ்சுக்கு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்டவற்றையும் பனைத் தொழிலாளர்கள் தயார் செய்கிறார்கள். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு மழை குறைவால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. அதேபோல கோடையிலும் மழை பெய்யாததால் இந்த ஆண்டு பனைகளில் பதநீர் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனால் கருப்பட்டி தயாரிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டுக்கான கருப்பட்டி சீசன் முடிவடைந்துவிடும்' என்றனர்.
இதுகுறித்து கருப்பட்டி வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மாதம் சாயல்குடி பகுதியில் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் சீசன் முடிவடைய உள்ளதால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது. அதிலும் பருவமழை, குளிர்காலத்தில் விலை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் ஏற்பட்ட மழை குறைவு, கருப்பட்டி தொழிலையும் விட்டுவைக்கவில்லை' என்றார்.
உடன்குடி ரக கருப்பட்டி பழையது ஒரு கிலோ ரூ.600, புதியது ரூ.500, பனங்கற்கண்டு கிலோ ரூ.800, சில்லுக்கருப்பட்டி ரூ.600 என விற்கப்பட்டு வருவதாக அப்பகுதி வியாபாரி ஒருவர் கூறினார்.