சிறப்புக் கட்டுரைகள்

பூமியிலேயே மிக வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்...காரணம் என்ன?

ஐரோப்பாவின் பல நகரங்கள் வெப்பநிலையில் உச்சம் தொட்டுவிட்டன.

கோடை காலம் என்றாலே வெயில் விஸ்வரூபமெடுக்கும். அதிலும் மே மாதத்தில் வெப்பநிலை கிடுகிடுவென உயர்ந்து வாட்டி வதைக்கும். அதிலும் வெப்ப அலை அனலாய் வீசி மக்களை வேதனையில் ஆழ்த்தும். இந்தியாவை பொறுத்தவரை இந்த ஆண்டும் வெப்ப அலையின் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. வட இந்தியாவின் சில பகுதிகளில் 50 டிகிரி செல்சியஸ் வரை (122 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. அதனால் பல பகுதிகளில் பகலில் மட்டுமின்றி இரவிலும் வெப்பத்தின் நீட்சி தணியாமல் தொடர்கிறது.

கோர தாண்டவம்

கோடை காலம் முடிவுக்கு வந்த நிலையில் வெப்பநிலை குறைந்து சில பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. வெப்ப அலையால் அடைந்த துயரங்களில் இருந்து பலரும் விடுபட்டுவரும் நிலையில் வெப்ப அலை இந்தியாவை விட்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டி தனது கோர தாண்டவத்தை பதிவு செய்து வருகிறது.

ஆம்! ஐரோப்பா கண்டத்தில் பல நாடுகளில் வெப்பநிலை வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்து மக்களின் அன் றாட வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் மே மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி சாதனை படைத்திருக்கிறது. இன்னும் வெப்பநிலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

காரணம் என்ன?

சுட்டெரிக்கும் வெப்பநிலையும், புவி வெப்பமயமாதலால் அதிகரித்து வரும் தாக்கமும் ஐரோப்பாவை கடுமையாக பாதித்துள்ளன. இயல்பாகவே வேகமாக வெப்பமடையும் கண்டமாக இருக்கும் ஐரோப்பாவில் இந்த ஆண்டு வெப்ப நிலை விறுவிறுவென உயர்ந்துவிட்டது. அதிலும் உலக சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வேகமாக வெப்ப மடைந்து, பூமியிலேயே மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக ஐரோப்பாவை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கு 'வெப்ப குவிமாடம்' உருவானதே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது வெப்பக்காற்றை தேக்கி வைத்து ஓரிடத்தில் குவித்ததால் உண்டான பாதிப்பே வெப்பநிலை கடுமையாக நிலவுவதற்கு காரணமாகிவிட்டது. அதனால் ஐரோப்பாவின் பல நகரங்கள் வெப்பநிலையில் உச்சம் தொட்டுவிட்டன.

லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸில் மே மாதத்தில் 95.2 டிகிரி பாரன்ஹீட் (35.1 டிகிரி செல்சியஸ்) பதிவானது. ஸ்பெயின் தென் மேற்கு பகுதியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) எட்டியது. அயர்லாந்து மிதமான காலநிலை நிலவும் நாடாகும். அங்கும் மே மாத வெப்பநிலை சாதனை படைத்துவிட்டது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் (82.4 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

ஐரோப்பா கண்டத்தில் மே மாதத்தில் பதிவாகி இருக்கும் இந்த வெப்பநிலை மாற்றம் உலகளவில் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டுவதாக அமைகின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை

ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலை பாதிப்புகளால் மருத்துவ பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பலர் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவநிலை மாற்றம், தொழிற்சாலை கழிவுகள் உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

1000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

வெப்ப அலையால் ஸ்பெயினில் கடந்த ஜூனில் 1,028 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 407 ஆக இருந்தது. அதுவே, ஜூனில் அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

இந்த சூழலில், அதனை விட நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் பலி எண்ணிக்கை இரட்டிப்படைந்து உள்ளது. ஸ்பெயின் வரலாற்றிலேயே 2015-ம் ஆண்டுக்கு பின்னர், ஜூன் மாதத்தில் இவ்வளவு அதிக உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறையாகும். ஸ்பெயின் மட்டுமின்றி, ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, சுலோவாகியா மற்றும் அங்கேரி ஆகிய நாடுகளிலும் வெப்பநிலை அதிகரித்து உள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரல்

அதீத வெயிலில் தார்ச்சாலைகளின் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாக உயர்வதால், தார் உருகி சாக்லேட் போல உருகியது. ஜெர்மனியின் புகழ்பெற்ற நெடுஞ்சாலைகளான ஆட்டோபான் சாலைகளில் கான்கிரீட் மற்றும் தார் பரப்புகள் வெடிப்பதும், ரயில்கள் மற்றும் டிராம் வண்டிகளின் இரும்புத் தண்டவாளங்கள் வெப்பத்தால் விரிவடைந்து வளைந்து போவதும் நடந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் மக்கள் எவ்வித அடுப்பு அல்லது எரிபொருளின் உதவியும் இன்றி, தார்ச்சாலையின் மீதோ அல்லது இரும்புப் பாத்திரங்களை வெயிலில் வைத்தோ முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டுக் காட்டுகின்றனர். அந்த அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி சாலைகளில் தார்கள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டிருப்பது, முழு ஒத்திகை என்று உலக சுகாதார நிறுவனம் வர்ணித்துள்ளது.

அதாவது, ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவரும் கடுமையான வெப்ப அலையானது, வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் மிகக் கொடுமையான வெப்ப அலைக்கு எல்லாம் முழு ஒத்திகை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.