பாம்பார்டியர் 
சிறப்புக் கட்டுரைகள்

தொட்டாலே வெடிக்கும் பூச்சி! எதிரியை 100 டிகிரி வெப்பத்தில் பொசுக்கும் அதிசயம்

ஒரு வினாடிக்கு 500 முறை தொடர்ந்து வெடிக்கும், இது மெஷின் கன் போல இருக்கும்.

இயற்கையில் ஆச்சரியங்களுக்கு பஞ்சமே இல்லை. அதில் ஒன்றுதான் இந்த பாம்பார்டியர் வண்டாகும்.

இது என்ன வண்டு?

இந்த வண்டு உருவத்தில் மிக சிறியது; அதாவது, அரை இன்ச் முதல் 1 இன்ச் வரைதான் வளரும். பெரும்பாலான வகைகளில் இவற்றின் தலை மற்றும் நடுப்பகுதி சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திலும், இறக்கை பகுதி கருப்பு, அடர் நீலம் அல்லது பச்சை கலந்த கருப்பு நிறத்திலும் காணப்படும். உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வண்டு வகைகள் உள்ளன. அண்டார்டிகாவை தவிர அனைத்து கண்டங்களிலும் இவை வாழ்கின்றன. பொதுவாக காடுகள் மற்றும் புல்வெளிகளில் உள்ள ஈரப்பதமான இடங்களில் இவை காணப்படும். ஆனால், இதன் தனிச்சிறப்பே இதன் தனித்துவமான பாதுகாப்பு ஆயுதம்தான்.

அண்டார்டிகாவை தவிர அனைத்து கண்டங்களிலும் வாழ்கிறது. காடுகள், புல்வெளிகளில் ஈரப்பதமான இடத்தில் இருக்கும். ஆனால் இதன் தனி சிறப்பு, இதன் பாதுகாப்பு ஆயுதம் தான்.

உடலுக்குள் ஒரு கெமிக்கல் தொழிற்சாலை!

இந்த வண்டின் வயிற்றுக்குள் 2 தனித்தனி அறைகள் உள்ளன.

முதல் அறை ரிசர்வாயர் : இதில் ஹைட்ரோகுவினோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற 2 வேதிப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த வேதிப்பொருள் தனித்தனியாக இருக்கும் வரை ஆபத்தில்லை. 2-வது அறை ரியாக்சன் அறை: இதில் கேட்டலைஸ் மற்றும் பெராக்ஸிடேஸ் என்ற நொதிகள் இருக்கும். வண்டின் எதிரிகள் எறும்பு, சிலந்தி, தவளை தாக்க வரும்போது, தன் உடலின் வால்வை திறக்கிறது. 2 ரசாயனங்களும் 2-வது அறைக்குள் பாய்கின்றன.

100 டிகிரி செல்சியஸ்

அங்கு பயங்கர வேதிவினை நடக்கிறது. வெப்பம் உடனே 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கும் அளவு உயர்கிறது. தண்ணீர் ஆவியாகி, அழுத்தம் உருவாகி, பொப் என்ற சத்தத்துடன் வெடித்து வெளியே வருகிறது. வெளியே வருவது வெறும் தண்ணீர் அல்ல, பென்சோகுயினோன் என்ற நச்சு வேதிப்பொருள். எதிரியின் கண் மற்றும் மூச்சுக்குழாயை பதம் பார்த்துவிடும்.

இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

ஒரு வினாடிக்கு 500 முறை தொடர்ந்து வெடிக்கும், இது மெஷின் கன் போல இருக்கும். தன் உடலின் பின்புறத்தை 270 டிகிரி சுழற்றி எந்த திசையில் இருந்து எதிரி வந்தாலும் குறி பார்த்து அடிக்கும். தவளை இதை விழுங்கினால் கூட வயிற்றுக்குள் வெடிக்கும், அப்போது தவளை உடனே வாந்தி எடுத்து வெளியே தள்ளிவிடும். அந்த அளவு ஆபத்தானது. இது மனித தோலில் பட்டால் தீக்காயம் போல கொப்புளம் வரும்.

விஞ்ஞானிகள் வியப்பு

எம்.ஐ.டி விஞ்ஞானிகள் கூட இந்த வண்டை ஆராய்ந்து, இது தன் உடலை வெடிக்க வைக்காமல் எப்படி கட்டுப்படுத்துகிறது என்று வியந்துள்ளனர். இதன் ரியாக்‌ஷன் செம்பர்,சிட்டின் என்ற கடினமான பொருளால் ஆனதால் வெடிப்பை தாங்குகிறது. விட்டு விட்டு அடிப்பதால் உடல் சூடாகாமல் தப்பிக்கிறது.

இயற்கையின் மிகச்சிறிய போர் விமானம் என்றால் இந்த பாம்பார்டியர் வண்டுதான்!

SCROLL FOR NEXT