கோப்புப்படம் 
சிறப்புக் கட்டுரைகள்

தையல் மெஷின் ஊசி முதல் டெர்மினேட்டர் கதை வரை... கனவால் நிகழ்ந்த அற்புதங்கள்..!

கனவுகள் பல மகத்தான கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளன.

உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் புரட்சிகரமான யோசனைகளில் சில, உறங்கிக் கொண்டிருந்தபோது வந்த கனவின் மூலம் தோன்றியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்! மனிதர்களின் ஆழ்மனதில் தோன்றும் கனவுகள், பல மகத்தான கண்டுபிடிப்புகளுக்கு வித்தாக அமைந்துள்ளன. மனிதர்கள் விழித்திருக்கும் நேரத்தை விட, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது சிக்கலுக்கு தீர்வு காணும் திறன் மூன்று மடங்கு அதிகமாக இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தூக்கம் என்பது வெறும் ஓய்வுக்கான நேரம் மட்டுமல்ல; அது நமது சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமையான யோசனைகளை வளர்க்கும் சக்திவாய்ந்த செயல்முறையாகவும் விளங்குகிறது. வரலாற்றில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கலைப் படைப்புகள் மற்றும் சிறந்த கதைகள் தூக்கத்தில் வந்த கனவுகளால் உருவாகியுள்ளன. ஆழ்மனதில் அவர்கள் தேடிக்கொண்டிருந்த தீர்வுகளைக் கனவுகள் எளிமையாகவும், குறியீடாகவும் அவர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளன. அவ்வாறு கனவுகள் மூலம் உருவான கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் குறித்து இதில் பார்ப்போம்.

மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணை

ரஷிய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) பல நாட்களாக தனிமங்களை வரிசைப்படுத்த முடியாமல் சிரமப்பட்டார். ஒரு நாள் அதுகுறித்த சிந்தனையின்போது அப்படியே மேசையில் தூங்கிவிட்டார். அப்போது வந்த கனவில் அவர், தனிமங்கள் அனைத்தும் அவற்றின் அணு நிறை மற்றும் பண்புகளின் அடிப்படையில் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்ட ஒரு அட்டவணையை பார்த்துள்ளார். தூக்கத்தில் இருந்து விழித்ததும் உடனடியாக அதை காகிதத்தில் எழுதியுள்ளார். இப்படித்தான் மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையை அவர் உருவாக்கியுள்ளார்.

தையல் இயந்திரத்தின் ஊசி

1845-ல் துணிகளை தைப்பதற்கு ஒரு இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் எலியாஸ் ஹோவ் (Elias Howe) என்பவர் ஈடுபட்டிருந்தார். அதில் வெற்றி கிடைக்காமல் சோர்ந்திருந்த எலியாஸ் ஒரு நாள் தூங்கும்போது ஒரு கனவை கண்டார். அந்த கனவில், அவரை நரமாமிச உண்ணிகள் கடத்திச் சென்று சமைக்க தயாராகியுள்ளனர். தங்களது ஈட்டிகளை ஆட்டியபடி அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தபோது, எலியாஸ் அந்த ஈட்டியை கவனித்துள்ளார். அப்போது அதன் கூர்முனைக்கு அருகே துளை இருப்பதை கண்டார்.

அப்போது தையல் இயந்திரத்தின் ஊசிக்கான யோசனை எலியாசுக்கு கிடைத்தது. அதுவரை ஊசியின் பின்புறம் நூல் கோர்க்கும் முறையே இருந்த நிலையில், ஊசியின் முனையில் நூல் கோர்க்கும் வகையில் மாற்றியமைத்து தையல் இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார்.

அணுவின் மாதிரி

1922-ல், டேனிஷ் இயற்பியலாளர் நீல்ஸ் போர், அணுவின் மாதிரியைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றான நீல் போரின் அணு அமைப்பு ஒரு கனவிலேயே கண்டறியப்பட்டது. சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல, ஒரு அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்வதை அவர் தனது கனவில் கண்டார். பின்னர் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து அணுவின் மாதிரி கொள்கையை உருவாக்கினார்.

அவதார் திரைப்படம்

உலகில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் உள்ள அவதார் திரைப்படத்திற்கான உத்வேகம் ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு கனவில் இருந்துதான் தொடங்கியது. ஜேம்ஸ் கேமரூன் இளைஞராக இருந்தபோது, ஒளிரும் மரங்களைக் கொண்ட காடு, ஒளிரும் துகள்களை உமிழும் நதி, அழகான உயிரினங்கள் நிறைந்த ஒரு உயிரிஒளிர்வு (Bioluminescence) காட்டை தனது கனவில் கண்டார். அந்தக் கனவு பல ஆண்டுகளாக அவர் மனதில் இருந்த நிலையில், இறுதியில் அதுவே 'அவதார்' திரைப்படத்தில் வரும் பாண்டோராவின் பிரமிக்க வைக்கும் உலகத்தை அவர் உருவாக்குவதற்கு உத்வேகம் அளித்தது.

டெர்மினேட்டர் திரைப்படம்

அவதார் திரைப்படத்தை போலவே டெர்மினேட்டர் திரைப்படமும் ஜேம்ஸ் கேமரூனின் கனவில் இருந்து உருவானதுதான். 1981-ல் ரோமில் உள்ள ஒரு விடுதியில் 102 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்தபோது, ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில், இரும்பு எலும்புக்கூடு (ரோபோ போன்ற ஒன்று) சமையலறைக் கத்தியை வைத்துக் கொண்டு நெருப்பு பிழம்பிலிருந்து தப்பிக்க முயல்வது போன்ற காட்சியை கண்டுள்ளார். பின்னர் கனவில் இருந்து விழித்துக் கொண்ட அவர், உடனடியாக அதனை படமாக வரைந்துள்ளார். பின்னர் அது உலகையே திரும்பி பார்க்க வைத்த டெர்மினேட்டர் கதையாக உருவானது.

படைப்புகளுக்கு தூண்டுகோல்

கனவுகள் பல மகத்தான கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளுக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளன. நாம் உறங்கும் நேரத்தில் மூளை, பகலில் சேகரித்த தகவல்களை ஒருங்கிணைத்து புதிய தொடர்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதையே இவை உணர்த்துகின்றன.

எனவே, தரமான தூக்கத்தை வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய அங்கமாகக் கருதுவது உடல் நலத்திற்காக மட்டுமல்ல, சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் புதிய சாதனைகளுக்கான கதவுகளைத் திறக்கவும் மிகவும் முக்கியமானதாகும். யாருக்குத் தெரியும்? இன்று நீங்கள் காணும் ஒரு கனவுதான், நாளைய உலகை மாற்றும் அடுத்த மகத்தான கண்டுபிடிப்புக்கான விதையாக இருக்கலாம்.