சிறப்புக் கட்டுரைகள்

முதல் 10 மாதங்களில் டாலர் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 9% குறைந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஜனவரி), டாலர் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 9 சதவீதம் குறைந்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

இறக்குமதியில் முதலிடம்

உலக அளவில், தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு 800-900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3,280 கோடி டாலருக்கு (சுமார் ரூ.2.30 லட்சம் கோடி) தங்கம் இறக்குமதி ஆகி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் அது 3,370 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து இருந்தது.

இந்நிலையில், ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 2,464 கோடி டாலருக்கு (சுமார் ரூ.1.74 லட்சம் கோடி) தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) அது 2,700 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி 9 சதவீதம் குறைந்து இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி 32 சதவீதம் குறைந்து 158 கோடி டாலராக (சுமார் ரூ.11,070 கோடி) உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 231 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 48 சதவீதம் குறைந்து (69 டன்னில் இருந்து) 36 டன்னாக குறைந்து இருக்கிறது.

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.

நடப்புக்கணக்கு

தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்போது வர்த்தக பற்றாக்குறை உயர்ந்து நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் (சரக்கு மற்றும் சேவைகள் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பிற்கும், ஏற்றுமதி மதிப்பிற்கும் இடையிலான வித்தியாசம்) அதிகரிக்கிறது.

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 630 கோடி டாலராக குறைந்து இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 0.9 சதவீதமாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 1,900 கோடி டாலராக (2.9 சதவீதம்) இருந்தது.