இன்றைய டிஜிட்டல் உலகில் பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமல்ல; பாதுகாப்பாகவும், எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்தியும் இலக்கை அடைவதுதான் முக்கியம். இந்த தேவையை பூர்த்தி செய்யும் நம்பகமான செயலிகளில் முதன்மையானது கூகுள் மேப்ஸ். பயணத்தை புத்திசாலித்தனமாக மாற்றும் பல வசதிகளையும் இந்த செயலியில் கூகுள் வழங்கி வருகிறது. ஆனால் இந்த வசதிகளில் பலவற்றை இன்னும் ஏராளமான பயனர்கள் பயன்படுத்தவே தெரியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் கூகுள் மேப்ஸ் குறித்து பலரும் அறியாத தகவல்களை இதில் காண்போம்.
கூகுள் மேப்பில் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்று தூரத்தை அளவிடும் வசதி (Distance Measure). டிஸ்டன்ஸ் மெஷர் வசதி மூலமாக இரண்டு இடங்களுக்கு இடையிலான தூரத்தை சுலபமாக கணக்கிட முடியும். மலையேற்றம், சைக்கிள் பயணம் அல்லது பயணம் மேற்கொள்வோர் இந்த வசதியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். வரைபடத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து டிஸ்டன்ஸ் மெஷர் வசதியை பயன்படுத்தினால், இரண்டு இடங்களுக்கு இடையிலான தூரம் கிலோமீட்டரில் தெரியும்.
அதேபோல் பெரிய மால்கள் அல்லது கூட்டம் நிறைந்த பார்க்கிங் பகுதிகளில் வாகனத்தை எங்கே நிறுத்தினோம் என்பதை மறந்து போவது பலருக்கும் சாதாரண விஷயம். இதற்காகவே கூகுள் மேப்ஸ் ஆப்பில் பார்க்கிங் செய்த இடங்களை சேமிக்கும் (Save Parking feature) வசதி உள்ளது. பார்க்கிங் செய்த இடத்தில் நின்று, கூகுள் மேப்பில் அந்த இடத்தை சேமித்தால், பின்னர் அதே இடத்துக்குத் திரும்ப கூகுள் மேப் வழிகாட்டும்.
இணைய வசதி இல்லாத இடங்களிலும் கூகுள் மேப் பயன்படும் என்பது பலருக்கு தெரியாத முக்கிய விஷயம். ஆப்லைன் மேப்ஸ் (Offline Maps) வசதியின் மூலம் முன்கூட்டியே ஒரு பகுதியின் வரைபடத்தை தரவிறக்கம் (download) செய்து வைத்துக்கொண்டால், இணைய வசதி இல்லாத பகுதிகளிலும் மேப்பை பயன்படுத்த முடியும். குறிப்பாக மலைப்பகுதிகள் அல்லது பயணங்களின்போது இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
மின்சார வாகன பயனர்களுக்காக இ.வி. சார்ஜிங் ஸ்டேஷன் தேடல் மற்றும் விவரங்களையும் கூகுள் மேப்ஸ் வழங்குகிறது. அருகில் இருக்கும் இ.வி. சார்ஜிங் ஸ்டேஷன்களை காட்டு (EV charging station near me) என்று தேடினால் அருகிலுள்ள மின்சார சார்ஜிங் இடங்களையும், சார்ஜர் வகைகளையும், அதன் பயன்பாட்டு நிலையையும் தெரிவிக்கும். நீண்ட தூர பயணங்களின்போது, இது எலெக்ட்ரிக் வாகன பயனர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது.
ஸ்டிரீட் வியூ டைம் டிராவல் (Street View Time Travel) என்ற வசதி, சில முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டுகளில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. அதாவது, நான் தேடும் சாலை கடந்த ஆண்டுகளில் எப்படி இருந்தது, இப்போது அது எப்படி மாறி இருக்கிறது என்பதை கூட இந்த வசதியின் மூலம் அறிந்து கொள்ளலாம். பழைய சாலைகள், கட்டிடங்கள், நகர வளர்ச்சி போன்றவற்றை ஒப்பிட்டு பார்ப்பதற்காக இந்த வசதி பலரால் பயன்படுத்தப்படுகிறது.
புதிய நகரங்களுக்குச் செல்லும்போது அருகிலுள்ள ஓட்டல், தங்குமிடம், ஏ.டி.எம்., மருந்தகம் போன்றவற்றையும் கூகுள் மேப் கண்டுபிடித்து காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் ஓட்டல்களின் விமர்சனம், உணவுகளின் புகைப்படங்கள், சில ஓட்டல்களின் மெனு கார்டு தகவல்களையும் பார்க்க முடியும். இதனால் உணவு ஆர்டர் செய்வதற்கு முன்பு விலை மற்றும் தரத்தை தெரிந்து கொள்ள பலர் மேப்பை பயன்படுத்துகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து குறித்த லைவ் அப்டேட், குரல் வழி வழிகாட்டுதல் போன்ற நவீன வசதிகள் காரணமாக கூகுள் மேப்ஸ் இன்று சாதாரண வழிகாட்டும் ஆப் என்பதை தாண்டி, அன்றாட வாழ்க்கையின் டிஜிட்டல் பயண உதவியாளராக மாறியுள்ளது.