சிறப்புக் கட்டுரைகள்

கண்ணீரைத் துடைக்கும் கரங்கள்

இன்று ஏராளமான தன்னார்வ அமைப்புகள் பல்வேறு சேவைகளை ஏழை எளியவர்களுக்குச் செய்து வருகிறது. அப்படி ஒரு அமைப்புதான் சி.ஆர்.ஒய். (CRY) அமைப்பு. அரசு சாரா அமைப்பான இது எப்படி ஏற்பட்டது தெரியுமா?

மும்பையில் ரிப்பன் கபூர் என்ற சிறுவன் தன் சினேகிதப் பையன்களிடம் நாம் பெரியவங்களா ஆனதும் நமக்கு இருக்கிற வசதிகளை வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கட்டாயம் செய்யணும் என்று சொல்வானாம்.

தனது 20-வது வயதில் அவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக சேர்ந்தார். அப்போது தன்னுடைய சிறுவயது தொண்டு உணர்வு சிந்தனையை செயல்படுத்த எண்ணினார். 1979-ல் தனது சிறுவயது நண்பர்கள் 7 பேரை மீண்டும் கூட்டு சேர்த்து உணவருந்தியபடியே தங்கள் சேவையை தொடங்க தீர்மானித்தனர். ஒவ்வொருவரும் தலா 7 ரூபாயை நிதியாக கொடுத்தனர்.

தங்களைப்போல ஏழைகளுக்கு நன்கொடை வழங்க முன்வருபவர்களையும் ஒன்று சேர்த்து ஏழை குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். அவர்கள் தங்கள் அமைப்புக்கு Child Relief and You என்று பெயர் சூட்டினார்கள்.இதன் சுருக்கச் சொல்லே CRY என்பதாகும்.

7 பேருடன் தொடங்கப்பட்ட இந்த தொண்டு அமைப்பு இன்று 80 ஆயிரம் தொண்டர்கள் பணியாற்றும் அமைப்பாக வளர்ந்திருக்கிறது. வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள், பெண் குழந்தை பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி சிறுவர்கள், தீய வழிக்கு திருப்பப்பட்ட சிறுவர்கள் ஆகியோருக்கு உதவி செய்து மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது இந்த அமைப்பு.

இதை உருவாக்கிய ரிப்பன் கபூர் 1994-ல் தன் 40-வது வயதில் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ஆனாலும் அவரது தொண்டு அமைப்பு உயிர்ப்புடன் அவரது கனவை நனவாக்கிக் கொண்டு வருகிறது.

- சஜிதா, அகஸ்தீஸ்வரம்.