மழைக்காலத்தில் பொருட்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் (AI Image) 
சிறப்புக் கட்டுரைகள்

மழைக்காலத்தில் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது எப்படி?

கோடைகாலத்தில் எவர்சில்வர் டப்பாக்கள் போன்றவற்றில் பொருட்களை வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில், காற்றுப் புகா பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துவது நல்லது.

மழைக்காலத்தில் நம்மைப் போலவே நாம் பயன்படுத்தும் பொருட்களையும் ஈரப்பதம், பூஞ்சை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய பாதுகாப்பு முறைகளை பார்ப்போம்.

மின்னணு சாதனங்கள்

* மழைக்காலங்களில் லேப்டாப், டேப், செல்போன் போன்றவற்றை வெளியில் எடுத்துச் செல்லும்போது வாட்டர் புரூப் பைகள் அல்லது கவர்களில் வைத்து எடுத்துச் செல்லவேண்டும்.

* கேமராக்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வைக்கும் பைகளுக்குள் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை போட்டால், அது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பாதுகாப்பாக வைத்திருக்கும்.

* பாத்திரம் கழுவிய ஈரமான கையால் சுவிட்ச் அல்லது மின்னணு சாதனங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

முக்கிய ஆவணங்கள்

* ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து ஆவணங்களை, மூடும் பிளாஸ்டிக் பைல்கள் அல்லது ஜிப்-லாக் பைகளில் போட்டு பாதுகாப்பான பெட்டியில் வைக்கவும்.

* முக்கியமான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை உங்கள் கூகுள் டிரைவ் அல்லது மின்னஞ்சலில் சேமித்துவைத்துக் கொள்வது அவசரகாலத்துக்கு உதவும்.

ஆடைகள்

* துணிகளை அலமாரியில் அடுக்கி வைக்கும்போது அவற்றுடன் கற்பூரம் அல்லது காய்ந்த வேப்பிலைகளை ஒரு துணியில் முடிந்து வைத்தால், ஈரப்பதம் அண்டாமல் துணிகள் வாசனையாக இருப்பதுடன், நேரடியாக துணிகளில் கறை ஏற்படாமலும் இருக்கும்.

* தோலால் செய்யப்பட்ட காலணிகள், பொருட்கள் மற்றும் பைகளை ஈரமான இடங்களில் வைக்காமல், காற்றோட்டமான உலர்ந்த இடத்தில் வைக்கவும். இதனால் மழைக்காலத்தில் இவற்றின் மீது பூஞ்சை படியாமல் இருக்கும்.

* மழைக்காலத்தில் தோல் காலணிகளைத் தவிர்த்துவிட்டு, எளிதில் சுத்தம் செய்யக்கூடிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் காலணிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதற்கு இது மிகவும் வசதியாக இருப்பதுடன். மழையில் நடப்பதற்கு கால்களுக்கு பளுவாக இல்லாமலும் இருக்கும்.

மளிகைப் பொருட்கள்

* கோடைகாலத்தில் எவர்சில்வர் டப்பாக்கள் போன்றவற்றில் பொருட்களை வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில், காற்றுப் புகா பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துவது நல்லது. உப்பு, மிளகாய்த்தூள், சர்க்கரை மற்றும் ரவை போன்ற பொருட்கள் மழைக்காற்றில் ஈரப்பதம் அடைந்து கட்டிப்படும். எனவே அவற்றை. நன்றாக மூடும் காற்றுப்புகா டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.

* அரிசி, மாவு, எண்ணெய் வகைகள், மளிகைப் பொருட்களில் வண்டுகள் வராமல் இருக்க, பொருட்களுக்குத் தகுந்தாற்போல் பிரிஞ்சி இலை, நொச்சி இலை, வேப்பிலை, சிறு வெல்லத்துண்டு, சில கிராம்பு அல்லது சிறிதளவு பெருங்காயத்தைப் போட்டு வைக்கலாம்.

மழை தொடங்குவதற்கு முன்பே இவ்வாற அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது சிறந்தது.

SCROLL FOR NEXT