தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரம், வரலாற்று சிறப்புமிக்கது. இதனை 'மதராஸ்' என்றும், 'சென்னை' என்றும் இரு பெயர்களால் அழைத்தார்கள். 'மதராஸ்' என்பதை 'மெட்ராஸ்' என்று பிற மொழிகளில் எழுதினார்கள். இந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னால் 385 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு ஒளிந்திருக்கிறது.
கடந்த 1639-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், சந்திரகிரி மன்னரின் பிரதிநிதியான தாமல் வேங்கடப்ப நாயக்கரிடம் இருந்து 22 ஆகஸ்ட் 1639 அன்று ஒரு சிறிய நிலப்பரப்பை வாங்கினர். அந்த நாள் தான் இன்றும் 'மெட்ராஸ் தினமாக' கொண்டாடப்படுகிறது.
அவர்கள் வாங்கிய இடத்தில் இரண்டு கிராமங்கள் இருந்தன. ஒன்று மெட்ராஸ்பட்டினம், மற்றொன்று சென்னப்பட்டினம். அதில், 'மெட்ராஸ்பட்டினம்' என்பது மீனவர்கள் வாழ்ந்த கடற்கரை கிராமம். 'சென்னப்பட்டினம்' என்பது சென்னப்ப நாயக்கரின் பெயரால் அழைக்கப்பட்ட உள்பகுதி ஆகும். ஆங்கிலேயர்கள் இவ்விரண்டையும் இணைத்து ஒரு கோட்டையைக் கட்டினர். அதுதான் இன்றைய புனித ஜார்ஜ் கோட்டை.
சென்னை நகருக்கு இப்பெயர் வந்ததற்கு, வரலாற்று அடிப்படையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டிடம் உள்ள இடத்தில், சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவப் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. இதனால் இப்பகுதி 'சென்னகேசவபுரம்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் 'சென்னை' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
போர்ச்சுகீசியர்கள் இங்கு வந்தபோது, 'மாட்ரே டி டியஸ்' என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள். அதுவே மருவி 'மெட்ராஸ்' ஆனது என்பது ஒரு கருத்து. ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் (பழைய தலைமைச் செயலகம்) கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயக்கர் மற்றும் வேங்கடப்ப நாயக்கர் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரால் இப்பகுதி 'சென்னப்பட்டினம்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் சென்னை என்று மாறியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், 'மெட்ராஸ்பட்டினம்' என்ற மீனவக் கிராமத்தின் பெயரே 'மெட்ராஸ்' ஆனது என்றும், 'மதரசன்' என்ற உள்ளூர் மன்னர் ஒருவரின் பெயரிலிருந்து இப்பெயர் வந்தது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள், மெட்ராஸைத் தங்களது தலைமையிடமாக மாற்றினர். மெட்ராஸ் மாகாணம் என்பது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் வரை பரந்து விரிந்திருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகும் கூட 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரே நீடித்தது. தமிழ் ஆர்வலர்கள், ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் வேண்டாம்; நமது மண்ணின் அடையாளமான 'தமிழ்நாடு' என்ற பெயரே மாநிலத்திற்கு வைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி விருதுநகரில் தனது வீட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அன்றே காமராஜர் அரசு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், சங்கரலிங்கனார் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவர் 76 நாட்கள் உணவு இல்லாமல் இருந்தார். இறுதியில், 1956 அக்டோபர் 13-ம் தேதி உயிரிழந்தார். அவர் இறந்து சில ஆண்டுகளுக்கு பிறகு, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அண்ணா ஆட்சியில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டது. ஆனால், தலைநகரின் பெயர் மட்டும் 'மெட்ராஸ்' என்றே இருந்தது.
எனவே, சென்னை நகரின் பெயரை 'சென்னை' என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதை அப்போதைய முதல்-அமைச்சர் மு. கருணாநிதி 17.07.1996 அன்று சட்டசபையில் அறிவித்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்தது. அன்று முதல் அதிகாரப்பூர்வமாக 'மெட்ராஸ்', 'சென்னை' ஆனது.
அனைத்து மொழிகளிலும் 'சென்னை' என்றே அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைப் பல தரப்பினரும் வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் கூறியதாவது:-
சென்னப்பட்டினம்' என்பதன் சுருக்கம்தான் 'சென்னை'. "நகரத்தின் பெயர் 'சென்னை' என்று எல்லா மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அறிவிப்பு பலராலும் வரவேற்கத்தக்கது" என்று அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் கூறினார். இதேபோல், அப்போதைய காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரும் இந்த முடிவை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
குமரி அனந்தன் வெளியிட்ட அறிக்கையில், "மெட்ராஸ் என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, எல்லா மொழிகளிலும் 'சென்னை' என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
பழ. நெடுமாறன் விடுத்த அறிக்கையில், "மெட்ராஸ் என்பது இனி 'சென்னை' என எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அதைப்போல, தமிழகத்தில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் இடைக்காலத்தில் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன. அவற்றின் தமிழ்ப் பெயர்களை மீண்டும் நிலைநிறுத்தும்படி வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நகரத்தின் பெயர் சென்னை என்று மாறினாலும், 'மெட்ராஸ்' என்ற பெயர் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம், மெட்ராஸ் ஐ.ஐ.டி, மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகியவை தங்களது பெயரை மாற்றவில்லை. காரணம், அவை வெறும் நிறுவனங்கள் அல்ல; வரலாற்றுச் சின்னங்கள்!