இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான கேரட் சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.
சாதம் - 1 கப் (உதிரியாக வடித்து எடுத்தது)
கேரட் - 5 (மீடியம் சைஸ்)
கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
முந்திரி பருப்பு - 10
வறுத்த வேர்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
எலுமிச்சை பழம் - பாதி
முதலில் கேஸ் அடுப்பில் சாதத்தை வடித்து உதிரியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து, கேரட்டை துருவவும். தொடர்ந்து, கேஸ் அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் சூடாகியதும் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு - உளுந்தம் பருப்பை சேர்க்கவும்.
கடுகு - உளுந்தம் பருப்பு பொறிந்ததும் கடலை பருப்பை சேர்க்கவும். கடலை பருப்பு பொறிந்து சிவந்து வரும்போது, வெட்டி வைத்த இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி பருப்பு, வறுத்த வேர்க்கடலை, இரண்டாக கீரிவைத்த பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து துருவிய தேங்காய், மிளகாய் பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும். தொடர்ந்து, துருவி வைத்த கேரட்டை சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் ஊற்றக்கூடாது. எண்ணெய்யிலேயே வேகவேண்டும். அதனால் நன்கு வதக்கவும். அடுத்து சாதத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். நிறைவாக வெட்டிவைத்த கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிடவும். சுவையான கேரட் சாதம் ரெடி.