மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் தாக்குதலை முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்தலாம்.
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் என்பது தோல் கழலை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த கிருமி தாக்கினால் நோய் அறிகுறிகள் தோன்ற 4 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். அதிக காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் கால் வலி ஏற்பட்டு நடக்க இயலாத நிலை, நிணநீர் கணுக்கள் உள்ள கீழ்த்தாடை, வயிறு அடிப்பகுதி, மடியில் அதிக வீக்கம் ஏற்பட்டு நீர் கோர்த்து காணப்படுவது.
முன்கால் முட்டி பகுதி மற்றும் பின்கால் முட்டி பகுதிகளில் வீக்கம் ஏற்படும். 3 முதல் 5 செ.மீ. அளவுள்ள அம்மை கொப்புளங்கள் தலை, கழுத்து, பிறப்பு உறுப்பு பகுதி, கால் பகுதிகளில் ஏற்படும். இந்த கொப்புளங்களின் மையப்பகுதியில் தோல் காய்ந்து உதிர்ந்து விழும்.
பெரியம்மை நோய் பாதித்த மாடுகளை தனியாக பிரித்து காய்ச்சல், கால் வலி, தோல் புண்கள் விரைவில் குணமாக கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும். வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து முதல் நாள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும், 2-ம் நாளில் இருந்து ஒரு நாளைக்கு 3 முறை வீதம் 14 நாட்கள் கொடுக்கலாம்.
வேப்ப இலை, குப்பைமேனி இலை, துளசி இலை, மருதாணி இலை, மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் என சேகரித்து, அனைத்தையும் ஒன்றாக அரைத்து தேங்காய் அல்லது வேப்ப எண்ணெய்யில் கொதிக்க வைத்து புண், கொப்புளங்களில் தடவலாம்.
பாதிக்கப்பட்ட மாடு, கன்றுகளை தனியாக பிரித்து பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. பூச்சிகள், கொசுக்கள், உண்ணிகள், ஈக்கள் மூலம் நோய் பரவக்கூடும் என்பதால் கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி உண்ணி மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி நோய் பரவலை தடுக்கலாம்.
இளம் கன்றுகள் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் கன்றுகளுக்கு 6 மாதத்துக்குள் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். மாடுகளை நோய் பாதித்த பகுதிகளில் இருந்து இடமாற்றம் செய்யும்போது 4 வாரங்களுக்கு முன் பெரியம்மை நோய் தடுப்பூசி போடு வது அவசியம்.