சிறப்புக் கட்டுரைகள்

நடப்பு 2019-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் சந்தை ஆய்வாளர்கள் கருத்து

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

நடப்பு 2019-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், அதன் மூலம் திரட்டப்படும் நிதியும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறையும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரும் உத்வேகம்

2017-ஆம் ஆண்டு முழுவதுமாக புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கைகளில் பெரும் உத்வேகம் ஏற்பட்டு இருந்தது. காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் வரிசையாக பங்குகள் வெளியிட்டது அதன் பின்னணியாக இருந்தது. அந்த ஆண்டில் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களில் ஜி.ஐ.சி. ரீ முதல் நிறுவனமான புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. ஐசிஐசிஐ லோம்பார்டு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், எஸ்.பீ.ஐ. லைப், எச்.டீ.எப்.சி. ஸ்டாண்டர்டு லைப் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி பெருமளவு நிதி திரட்டின.

சில்லரை முதலீட்டாளர்கள்

பங்கு வர்த்தகத்தில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதும் புதிய வெளியீடுகளுக்கு நல்ல ஊக்கம் அளித்தது. பொதுவாக புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் நாளில் கடுமையாக விலை உயர்வது வழக்கம். எனவே அந்த லாபத்தை பெற விரும்பி புதிய வெளியீடுகளில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் 1,100 கோடி டாலர் (அன்றைய டாலர் மதிப்பில் சுமார் ரூ.70,000 கோடி) நிதி திரட்டப்பட்டது. பத்து ஆண்டுகளில் இல்லாத சாதனை அளவாக அது இருந்தது. 2018-ஆம் ஆண்டிலும் இந்த விறுவிறுப்பு நீடிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டில் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் மந்தம் அடைந்தது. ஏனென்றால் மொத்தம் 161 பங்கு வெளியீடுகள் வாயிலாக சுமார் 550 கோடி டாலர் (ஏறக்குறைய ரூ.35,000 கோடி) மட்டுமே திரட்டப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி சுமார் ரூ.65 ஆயிரம் கோடி திரட்டும் வகையில் புதிய வெளியீடுகளுக்கு அனுமதி வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2019-ஆம் ஆண்டிலும் புதிய பங்கு வெளியீட்டுச் சந்தை முடங்கி உள்ளது. ஏனென்றால் அண்மைக் காலமாக பங்குச்சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. பல நிறுவனங்கள் செபி அமைப்பின் அனுமதியை பெற்றும் பங்கு வெளியிட தயங்குகின்றன. சில நிறுவனங்கள் தமது பங்கு வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன.

சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களே இதற்கு காரணமாகும். நம் நாட்டில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே நிறுவன உலகம் காத்திருந்து செயலாற்றும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெருமளவு சரிவடையும்

என்றாலும் காலண்டர் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்படும் மந்தநிலையால் 2019-ஆம் ஆண்டில் புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், அதன் மூலம் திரட்டப்படும் நிதியும், கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பெருமளவு சரிவடையும் என அவர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச நிலவரங்களும் தற்சயம் பங்குச்சந்தைகளுக்கு சாதகமாக இல்லை. பிரெக்ஸிட் விவகாரம், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போட்டி போன்றவை உலக பங்கு வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. ஆக, சர்வதேச நிலைமைகளும் இந்திய பங்குச்சந்தைகளுக்கு இடர் ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்காலிக புள்ளிவிவரம்

தற்காலிக புள்ளிவிவரம் ஒன்றின்படி நம் நாட்டில் 19 நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிட செபி அனுமதி வேண்டி காத்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.18,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர ஏறக்குறைய 60 நிறுவனங்கள் செபி அனுமதி அளித்த பிறகு சுமார் ரூ.63,000 கோடி திரட்டும் வகையில் பங்கு வெளியிடுவதற்கு உகந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.