சென்னை,
செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'ஏஐ' தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இதனை பயன்படுத்தி புத்தகங்கள் எழுதுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், புத்தகங்களை உண்மையில் எழுதியது யார்? அதில் உள்ள தகவல்கள் சரியானவையா? என்ற கேள்விகள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன.
அமேசானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட 14 ஆயிரத்து 419 புத்தகங்களை ஆய்வு செய்ததில், சுமார் 20 சதவீத புத்தகங்களில் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட எழுத்துகள் கணிசமான அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் ஆயிரம் புத்தகங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான உள்ளடக்கம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோல், 1,229 எழுத்தாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 45 சதவீதம் பேர் தங்கள் எழுத்துப் பணியில் ஏஐ பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஏஐ பயன்படுத்தியதை வாசகர்களிடம் தெரிவிக்காத எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஏஐ பயன்பாடு தொடர்பாக சில எழுத்தாளர்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மியா பாலார்ட் எழுதிய 'ஷை கேர்ள்' என்ற நாவல் ஏஐ மூலம் எழுதப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த புத்தகத்தின் வெளியீட்டை ஹாசெட் பதிப்பகம் நிறுத்தியது. ஆனால், மியா பாலார்ட் ஏஐ மூலம் புத்தகம் எழுத வில்லை என்று மறுத்துள்ளார். நைஜீரிய எழுத்தாளர் ஜெர்ரி பலேட்டின் நாவலும் இதேபோல் சர்ச்சையில் சிக்கியது.
ஏஐ பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தால் அவருக்கு கிடைத்திருந்த மிகப்பெரிய பதிப்பக ஒப்பந்தம் பாதிக்கப்பட் டது. அவரும் ஏஐ பயன்படுத்தியதை மறுத்துள்ளார்.
காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற ஜமீர் நசீர், கேன் பரிசை வென்ற சிம்பராஷே குன்ட்டிசெசா ஆகியோரின் படைப்புகளும் ஏஐ சர்ச்சையில் சிக்கின. ஆனால், அவர்களது படைப்புகளை ஆய்வு செய்ததில் ஏஐ பயன்படுத்தியதாக உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமிழகத்திலும் ஏஐ தொடர்பான புத்தக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கோவையில் புதிதாக அமைக்கப்பட் டுள்ள பெரியார் அறிவுலகத்தில் வாங்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் ஏஐ மூலம் எழுதப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது அந்த புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஏஐ மூலம் புத்தகங்களை உருவாக்குவது எளிதாகிவிட்ட நிலையில், அரசு நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது.
புத்தகத்தை எழுதியவர் யார்? அவர் உண்மையில் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளாரா? அதில் கூறப்பட்டுள்ள தகவல் கள் சரியானவையா? ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளனவா? என்பதையெல்லாம் உறுதி செய்த பிறகே புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் எழுந்துள்ள இந்த பிரச்சினை, தற்போது தமிழகத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.