முதல் அமைச்சாரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக இருந்ததை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் சேர பயனாளிகள் எப்படி விண்ணப்பிக்கலாம். யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்.? என்ற விவரங்கள் வருமாறு:
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சுமார் 1.40 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்.அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட எட்டு நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறலாம். மேலும் 52 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யபட்டுள்ளது.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.காப்பீடுத் திட்டத்தில் இணைய விரும்புவோர் விஏஓவிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வசதிகள் உள்ளன.
ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம்பெற்று இருக்க வேண்டும்.தமிழக முகாம்களில் உள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், முகாம்களில் தங்கியிருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமானச் சான்றும் இல்லாமல் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் .
1. கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் அதிகாரிகளிடமிருந்து வருமானச் சான்றிதழ்.
2. குடும்ப அட்டை (அசல் மற்றும் நகர் இரண்டும் எடுத்துச் செல்ல வேண்டும்)
3. குடும்பத் தலைவரின் சுய உறுதிமொழி கடிதம்.
4. அடையாளச் சான்று
5. முகவரிச் சான்று
6. ஆதார் அட்டை
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தகவல்படி வருமான உச்சவரம்பு இல்லாமல் சிறப்பு தகுதி வழியாக சேர்க்கும் ஏற்பாடும் உள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்ற பிறகு, CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் நடைமுறையை தெரிந்து கொள்ள: https://docs.cmchistn.com/How_to_enroll_in_Tamil_2026.pdf.