சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்காவை கலங்க வைக்கும் ஈரானின் கொசுப்படை... அப்படி என்ன உள்ளது? தெரிந்து கொள்வோம்

எதிரி படைகளின் நீண்ட தூர ஏவுகணைகளால் இவற்றை தாக்குவது என்பது மிக கடினம்.

தெஹ்ரான்

ஈரானின் கொசுப்படையால் அமெரிக்கா சற்று கலக்கத்தில் உள்ளதுடன், அதனை எப்படி எதிர்கொள்வது? என திட்டம் தீட்டி வருகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியாக கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் ஏறக்குறைய 5 மாதங்களாக நீடித்து வருகிறது.

எனினும், இதனை ஈரான் திறம்பட எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. இதனால், உலக அளவில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.

கொசுப்படை

கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து உள்ளது. பங்கு சந்தைகளிலும் மாற்றம் ஏற்பட்டு, லாப நோக்கில் பங்குகள் காணப்படுகின்றன.

இந்த மோதல் தணிந்திருந்த போதிலும், அமெரிக்கா எந்நேரமும் தாக்கலாம் என்பதற்காகவும், ஜலசந்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலும், ஈரான், தன்னுடைய கடற்படையின் ஒரு பகுதியாக கொசுப்படையை பயன்படுத்தி வருகிறது.

விரைவு படகுகள்

அது என்ன கொசுப்படை? அதன் திறன் என்ன? அதில் அப்படி என்ன உள்ளது என்கிறீர்களா? சிறிய, விரைவாக செயல்பட கூடிய, அதிக ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லும் படகுகள் இந்த படையில் இருக்கும். இவை கடல் பகுதிகளில் அதிரடி தாக்குதல்களை நடத்தும் திறன் வாய்ந்தவையாகும்.

தெற்கு ஈரானில் செயல்படும் இந்த படை பிரிவில் நூற்றுக்கணக்கான சிறிய ரக விரைவு படகுகள் ஆனது, குறுகிய நீர்வழிகளிலும், கடலோர குகைகளிலும் மற்றும் சுரங்கத்திற்கு உள்ளேயும் செல்லும் திறன் பெற்றவை. அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

போர் கப்பல்கள்

இலகு ரக ஆயுதங்கள் அல்லது குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சுமந்தபடி செல்லும் இந்த படகுகள், கடலில் பெரிய, மெதுவாக செல்ல கூடிய போர் கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை தடுத்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

அப்படி நிறுத்தப்படும்போது அதிரடி தாக்குதல்களையும் நடத்தி விடும். எதிரிகளின் கப்பல்களையும் தகர்த்து விடும். இந்த படையில், விரைவாக சென்று தாக்கும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளும், தாக்குதல் படகுகளும், சிறிய வகை நீர்மூழ்கி கப்பல்களும் கூட இடம் பெற்றிருக்கும்.

புதின் பாராட்டு

இதனை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சமீபத்தில் பாராட்டி பேசினார். அவர் ரஷிய கடற்படை அதிகாரிகளுடன் கடந்த ஞாயிறன்று கூட்டம் ஒன்றை நடத்தியபோது, மத்திய கிழக்கில் போர் களத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரான் தங்களுடைய கொசுப்படையை பயன்படுத்தி வருகிறது.

அது போர் களத்தில் திறமையாக செயல்படுகிறது. இவற்றை வைத்து ஈரான் திறம்பட போரை எதிர்கொண்டு வருகிறது என புதின் புகழாரம் சூட்டினார்.

அவற்றில் ஈடுபடுத்தப்படும் படகுகள் சிறிய அளவில் இருந்தபோதும், நவீன ஆயுதங்களை கொண்டுள்ளதுடன், போரின்போது திறமையாக செயல்பட உதவுகிறது என்றார். அதனால், வருங்காலத்தில் ரஷிய கடற்படையும் இதுபோன்ற திறன் வாய்ந்த படை பிரிவை உருவாக்க வேண்டும் என்று அப்போது கேட்டு கொண்டார்.

சுரங்கங்கள்

இந்த வகை படகுகள், ஈரானின் பாறைகள் நிறைந்த கடலோர பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள சுரங்கங்களின் இடையே மறைத்து, நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இதனால், எதிரி படைகளின் நீண்ட தூர ஏவுகணைகளால் இவற்றை தாக்குவது என்பது மிக கடினம். ஆனால் இவை, மறைந்து இருந்தபடி எதிரிகளின் இலக்குகளையும், கப்பல்களையும் தாக்கும்.

இதனால், அமெரிக்கா சற்று கலக்கத்திலேயே உள்ளது. ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள பல வகையிலும் திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த படகுகள், நவீன யுத்த முறையில், புதிய ராணுவ தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.