சிறப்புக் கட்டுரைகள்

'அறிவுஜீவி' தூக்கணாங்குருவி பற்றிய சுவாரஸ்யங்கள்...!

ஒவ்வொரு கூட்டிலும் 2 அறைகளை தூக்கணாங்குருவி அமைத்துக்கொள்ளும்.

"பறவைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்" என்று பழைய பாடல் வரிகள் உண்டு. அந்த வரிசையில், அறிவுஜீவியான தூக்கணாங்குருவி பற்றிய சுவாரஸ்ய தகவலை தொடர்ந்து பார்க்கப்போகிறோம்.

* அறிவாற்றல் கொண்ட இக்குருவிகள் தென்மேற்கு பருவமழை பொழிவை முன்கூட்டியே கணித்துவிடுகின்றன. தனது கூடுகளில் வடக்கு நோக்கி வாசலை அமைத்திருந்தால், அந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்குமாம். தென்மேற்கில் இருந்து வீசும் காற்றும், பெய்யும் மழையும் கூட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடாம்.

* உயரமான இடம், நீர்நிலைகளுக்கு மேலே, விளைநிலங்களுக்கு அருகில் என ஒவ்வொன்றையும் பார்த்து.. பார்த்து.. இக்குருவிகள் கூடுகட்டுகின்றன. கூடுகளை உயரமாக அமைப்பதால் பாதுகாப்பு கிடைக்கும். நீர்நிலைகளுக்கு மேலே கட்டுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவும். விளைநிலங்களுக்கு அருகே கட்டுவதால், இரை அருகிலேயே கிடைத்துவிடும்.

* பெரும்பாலும் கூடுகட்ட பனை, ஈச்ச மரங்களையே இக்குருவிகள் அதிகம் தேர்வு செய்யும். அதுவும் ஆண் மரங்களை கண்டுபிடித்தே கூடுகட்டும். காரணம், ஆண் மரங்கள்தான் காய்க்காது.

* கூடுகளை உயரமான மரத்தின் கிளைகளின் நுனிப்பகுதியிலேயே கட்டும். காரணம், நுனிப்பகுதியில் கூடுகட்டும்போது பாம்பு, காகம் போன்ற இரைக் கொல்லிகளால் ஆபத்து ஏற்படாது.

* அதுவும் ஒரே இடத்தில் 20, 30 எண்ணிக்கையில் கூடுகளை கட்டும். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பது இந்த குருவிகளுக்கும் தெரிந்து இருக்கிறது.

* கூடுகட்டும் இடத்தை ஆண் குருவிதான் தேர்வு செய்கிறது. கரும்புத்தோகை, நெற்பயிர் தாள், பனை ஓலை, தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கூடுகளை கட்டும் இக்குருவிகள், ஒவ்வொரு கூட்டிலும் 2 அறைகளை அமைத்துக்கொள்ளும். ஒன்று முட்டைகளை பாதுகாக்க. மற்றொன்று ஆண் மற்றும் பெண் குருவிகள் தங்கிக்கொள்ள. அதுவும் முட்டை பாதுகாப்பு அறையை சுற்றிலும் களிமண் கொண்டு பூசியிருக்கும். காரணம், காற்று அதிகம் வீசும்போதும் முட்டைகள் கீழே விழாமல், ஒன்றுடன் ஒன்று மோதாமல் தவிர்க்க.

* கூடுகட்டும் ஆண் குருவிகள் 80 சதவீத பணிகள் முடிந்த பிறகே பெண் பறவையை அழைத்து வந்து காட்டும். பெண் பறவைகள் அதில் திருத்தங்கள் கூறினால், அதை உடனே ஏற்று ஆண் குருவிகளும் நிறைவேற்றி கொடுக்கும். குறிப்பாக, வாசல் அமையும் திசையை பெண் குருவிகளே முடிவு செய்யும்.

* ஒரு கூட்டினை ஆண் குருவிகள் கட்டி முடிக்க 18 நாட்கள் ஆகிறது. அதற்கான தளைகளை எடுத்துவர 500 முறை பயணம் செய்கிறது.

* கூடு கட்டி வசிக்க தொடங்கியதும் பெண் குருவிகள் 2 முதல் 4 முட்டைகளை இடுகின்றன. முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சிறிய புழுக்கள் மற்றும் பூச்சிகளை தாய் மற்றும் தந்தை குருவிகள் சேகரித்து வந்து, கூட்டில் உள்ள ஈரக் களிமண்ணில் புதைத்து வைத்துவிடும். குஞ்சுகள் பசியெடுக்கும்போது அவற்றை சாப்பிடும்.

* கூட்டின் உள்ளே இரவு நேர வெளிச்சத்துக்காக மின்மினி பூச்சிகளை பிடித்துவந்து, ஈரக் களிமண்ணில் தலையை புதைத்துவைத்துவிடும். இதனால், வீட்டில் நிலவுவது போல கூட்டிலும் வெளிச்சம் நிலவும்.

* ஆண் குருவி, மார்பு மற்றும் முதுகு பகுதியில் மஞ்சள் வர்ணத்துடனும், பெண் குருவி பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

* இக்குருவிகள் தனது இனப்பெருக்க காலத்தில் 3 முதல் 4 கூடுகளை அமைக்கும். பெண் குருவிகள் குஞ்சுகளை கவனித்துக்கொள்ளும்போது, ஆண் குருவிகள் மற்றொரு இடத்தில் புதிய கூட்டை கட்டும். குஞ்சுகள் பெரிதாக வளர்ந்ததும் அதில் உள்ள பெண் குருவி, மற்றொரு ஆண் குருவியுடன் சேர்ந்து மீண்டும் முட்டையிடும்.

* இக்குருவிகள் கூடுகட்டும் திறனை பார்த்து ஆராய்ச்சியாளர்களே அதிசயித்து நின்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு கலை நுணுக்கமும், கற்பனை திறனும் குருவிகளின் மரபணுவிலேயே இயல்பாக இருக்கிறதாம்.