சிறப்புக் கட்டுரைகள்

முதியோர் நாடாக மாறுகிறதா இந்தியா?.. காத்திருக்கும் புதிய சவால்!

முதியோர் பராமரிப்பு தொடர்பான சவால்கள் கிராமப்புறங்களில் அதிகமாக உருவாகும் நிலை ஏற்படக்கூடும்.

2050-ம் ஆண்டில் இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று ‘டிரான்ஸ்பார்ம் ரூரல் இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் இந்தியாவில் சுமார் 34 கோடியே 70 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பேரில் சுமார் 7 பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள் என்பதால், முதியோர் பராமரிப்பு தொடர்பான சவால்கள் கிராமப்புறங்களில் அதிகமாக உருவாகும் நிலை ஏற்படக்கூடும்.

வளர்ச்சிக்கு முன்பே முதுமை

வளர்ந்த பல நாடுகளில் பொருளாதார ரீதியாக வலுப்பெற்று, உயர் வருமானம் கொண்ட நாடுகளாக மாறிய பின்னரே முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இந்தியா குறைந்த வருமான நிலையிலேயே முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையிலான மக்கள்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதியோர் பராமரிப்பு, சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சமாளிப்பதில் புதிய சவால்

இந்தியாவில் முதியோர்களை பராமரிப்பதில் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆய்வின்படி, முதியோர் பராமரிப்பில் சுமார் 94 சதவீதம் குடும்பங்களுக்குள்ளேயே நடைபெறுகிறது.

எனினும், கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, தனிக்குடும்பங்களின் அளவும் குறைந்து வருவது, இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது, ஆயுட்காலம் அதிகரிப்பது போன்ற காரணிகள் முதியவர்களின் பராமரிப்பு தேவைகளை சமாளிப்பதில் புதிய சவால்களை ஏற்படுத்துகின்றன.

அதிகரிக்கும் பராமரிப்பு சுமை

ஊதியமில்லாத குடும்ப பராமரிப்பு பணிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. பெண்கள் தினமும் சராசரியாக 305 நிமிடங்களை இந்தப் பணிகளில் செலவிடுகின்றனர். ஆண்கள் சுமார் 56 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பராமரிப்பு பணிகளில் பெண்கள் அதிக நேரம் ஈடுபடுவது, அவர்கள் வேலைவாய்ப்பில் அதிகமாக பங்கேற்பதற்கு முக்கிய தடையாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், வெப்ப அலை, வெள்ளம் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் பெண்களின் பராமரிப்பு சுமையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

நோய்களால் அதிகரிக்கும் சிகிச்சை தேவை

இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு தொற்றுகள் மூலம் பரவாத நோய்களால் ஏற்படுகின்றன. நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

அதே நேரத்தில் முதுமையுடனும் நாட்பட்ட நோய்களுடனும் நீண்ட காலம் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை வழங்குவது போதுமானதாக இருக்காது என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழ்பவர்களுக்கு தொடர்ச்சியான அன்பும் ஆதரவும் வழங்கக்கூடிய சமூக அடிப்படையிலான பராமரிப்பு அமைப்பு தேவைப்படுகிறது.

ஒருங்கிணைந்த பராமரிப்பு வலையமைப்பு

கிராமப்புறங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கிராமப் பஞ்சாயத்துகள், சுய உதவிக் குழுக்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரே சமூக பராமரிப்பு வலையமைப்பாக உருவாக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

ஒவ்வொரு குடும்பமும் எளிதில் அணுகக்கூடிய தொலைவில் தேவையான பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

ஒரு கோடி வேலைவாய்ப்புகள்

முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்பு துறையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை முதலீடு செய்தால் சுமார் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

முன்கூட்டியே தயாராக வேண்டிய இந்தியா

நீண்ட ஆயுளுடன் வாழ்வது முன்னேற்றத்தின் அறிகுறியாக இருந்தாலும், அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகைக்கு ஏற்ப சுகாதாரம், பராமரிப்பு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்புகளை முன்கூட்டியே உருவாக்குவது அவசியம் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2050-ம் ஆண்டை நோக்கி இந்தியா நகரும் நிலையில், முதியோர் பராமரிப்பு என்பது குடும்பங்களின் தனிப்பட்ட பொறுப்பாக மட்டுமே இல்லாமல், சமூக அளவில் திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக உருவெடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT