காத்மாண்டு,
உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரிட்டனை சேர்ந்த 48 வயதான கென்டன் கூல், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 16வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நேபாள நாட்டை சேராத ஒருவர், அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதில் வினோதம் என்னவென்றால், 1996 இல் பாறை ஏறும்போது எற்பட்ட விபத்தில் அவருடைய இரண்டு குதிகால் எலும்புகளும் உடைந்தது. இதன்காரணமாக, அவர் இனி ஒருபோதும் உபகரணங்கள் உதவியின்றி நடக்க மாட்டார் என்று கூறப்பட்டது.
ஒரு வருட அறுவை சிகிச்சை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், அந்த கணிப்புகளை அவர் பொய்யாக்கியுள்ளார். ஆனால் இன்னும் அவருக்கு நாள்பட்ட கால் வலி உள்ளது.ஆனால், தன்னுடைய தன்னம்பிக்கையால், அவர் தொடர்ந்து மலையேறி சாதனை படைத்து வருகிறார்.
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர்சையர் என்ற பகுதியைச் சேர்ந்த கூல், ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அதிகாலை, தன்னுடைய வாழ்நாளில் 16வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
அவருடைய முயற்சியானது பலத்த காற்று காரணமாக தாமதமானது. இதனால் அவரது குழு மலை உச்சிக்கு கீழே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எவரெஸ்ட், லோட்ஸே மற்றும் நப்ட்சே ஆகிய 3 மலை உச்சி பகுதிகளை, கீழே அமைக்கப்பட்டுள்ள தங்கும் முகாமுக்கு திரும்பாமலேயே, ஒரே உந்துதலில் ஏறி முடித்த முதல் நபர் இவர் தான். எவரெஸ்ட், லோட்ஸே மற்றும் நப்ட்சே ஆகிய 3 மலை உச்சி பகுதிகள் எவரெஸ்ட் டிரிபிள் கிரீடம் என்றழைக்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது உயரமான மலையான கே2 உச்சிக்கு, மலையேற விரும்பும் நபர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அழைத்துச் சென்ற முதல் பிரிட்டிஷ் வழிகாட்டியும் இவரே.
அதே வேளையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ஏறுவதற்கு உதவும் பல நேபாளி வழிகாட்டிகள், எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறி சாதனைகளை முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிகரத்தின் மீது ஏறுவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர் காமி ரிட்டா (52). இவர் 1994-ல் முதன்முதலாக இந்த சிகரத்தில் ஏறினார். தொடர்ந்து, பல முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதித்துள்ளார். இந்நிலையில், காமி ரிட்டா, 11 வழிகாட்டிகள் அடங்கிய குழுவினருடன் கடந்த 7-ம் தேதி 26-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இதன்மூலம் அதிக முறை இந்த சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார்.
இதனையடுத்து, கென்டன் கூல், தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில், உள்ளூர் வழிகாட்டிகளுக்கு மரியாதை செலுத்தினார். அவர் கூறியிருப்பதாவது, உள்ளூர் வழிகாட்டிகள் எங்கள் சார்பாக கடுமையாக உழைத்தனர். உள்ளூர் வழிகாட்டிகள் தான் இந்த மலையின் சூப்பர் ஹீரோக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
எவரெஸ்ட் போன்ற மலை உச்சியின் மீது ஏறும்போது, அதீத நம்பிக்கை கொள்வது ஆபத்தான விஷயம். எனவே நீங்கள் கீழே பேஸ் கேம்பிற்குத் திரும்பும் வரை எதுவும் நிலையானதல்ல என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியில் ஏறுவதற்கு, மே மாதம் மிகவும் உகந்த நேரம் ஆகும். இதற்காக நேபாள அரசு பல்வேறு வசதிகள் செய்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும், ஒரே நாளில் 150 மலை ஏறுபவர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர் என நேபாள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.